இன்று புனித வெள்ளி: தேவாலயங்களில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் வழிபாடு

வியாழக்கிழமை, 1 ஏப்ரல் 2021      ஆன்மிகம்
good-friday

கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி நடைபெறும் என்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பெருவிழா வருகிற 4-ம் தேதி கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி கடந்த 28-ம்  தேதி குருத்தோலை திருநாள் நடந்தது. அன்று முதல் ஈஸ்டர் திருநாள் வரை புனித வாரம் கடைபிடிக்கப்படும். இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர்விடும் நாள் புனித வெள்ளியாக கடை பிடிக்கப்படும்.  இந்த நாளில் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகளும், வழிபாடுகளும் நடைபெறும்.  அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் புனித வெள்ளி வழிபாடுகள் இன்று நடை பெறுகிறது. சீரோ மலபார் சபை ஆலயங்களில் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை சிறப்பு பிரார்த்தனை  மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. 

சென்னை பாரிமுனை, சின்னமலை, சாந்தோம், எழும்பூர், பெரம்பூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள கத்தோலிக்க திருச்சபை ஆலயங்களில் புனித வெள்ளி வழிபாடு சிறப்பாக நடைபெறுகிறது. கத்தோலிக்க சென்னை மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி சாந்தோம் ஆலயத்தில் பங்கேற்று நற்செய்தி அளிக்கிறார்.  சி.எஸ்.ஐ. கதிட்ரல் தேவாலயத்தில் சென்னை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன் கலந்து கொள்கிறார். சி.எஸ்.ஐ. ஆலயங்களில் பகல் 11.30 மணிக்கு புனித வெள்ளி வழிபாடு தொடங்கி 3 மணி நேரம் நடைபெறும். இதேபோல இ.சி.ஐ. பெந்தே கோஸ்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடக்கிறது. கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று மாலை புனித வியாழன் வழிபாடுகள் நடைபெற்றது.  இதில் பாதம் கழுவும் சடங்குகள் நடந்தது.  தொடர்ந்து நற் கருணை ஆராதனை நடை பெற்றது.  

கொரோனா பிரச்சினை காரணமாக புனித வெள்ளி வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் அனைத்தும் அரசு அறிவித்துள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளின் படி நடைபெறும் என்று கிறிஸ்தவ சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.  வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளில் பங்கேற்போர் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முக கவசங்கள் அணிந்தும் வழிபாடுகளில் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.  வருகிற ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை அன்றும் அனைத்து ஆலயங்களிலும் விசே‌ஷ வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெறும். இதுவும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து