மும்பையில் பகலிலும் 144 தடை உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      இந்தியா
Mumbai 2021 04 06

மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பகல் நேரத்திலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அங்கு இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 57,074 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அது 10 ஆயிரம் குறைந்து 47,288 பேர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து உச்சபச்சமாக மகாராஷ்டிராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 57,074 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இதுவரை மகாஷ்டிராவில் கொரோனா வைரசுக்கு மொத்தம் 30,57,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு ஊரடங்கு, பகல் நேரத்தில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் இரவு ஊரடங்கில் 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்ற 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை பொது இடங்களில் மக்கள் கூட அனுமதி இல்லை.

இந்தநிலையில் பகல் நேரத்திலும் இந்த 144 தடையை அரசு நீடித்துள்ளது. இதையடுத்து மும்பை போலீசார் பகல் நேரத்திற்கும் பொருந்தும் வகையில் 144 தடை தொடர்பான உத்தரவை நேற்று வெளியிட்டனர். அதன்படி பொது இடங்களில் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

இந்த தடை உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து