'ஐ.பி.எல்' போட்டிகளில் இதுவரை நடைபெற்ற சுவாரஸ்ய சர்ச்சைகள்

செவ்வாய்க்கிழமை, 6 ஏப்ரல் 2021      விளையாட்டு
Match 2021 04 06

Source: provided

மும்பை : லிலித் மோடி மீதான ஊழல் புகார், ஸ்பாட் பிக்சிங் புகாரால் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் விதிக்கப்பட்ட தடை என இதுவரை நடந்த ஐ.பி.எல் போட்டிகளில் அரங்கேறிய சுவாரஸ்மான சர்ச்சைகளின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்.

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய கிரிக்கெட் திருவிழாவான ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் 9ம் தேதி தொடங்க உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காத ஐ.பி.எல் போட்டி சர்ச்சைகளும் நிறைந்திருக்கிறது. 

கோலி - கம்பீர் மோதல்

ஐ.பி.எல் போட்டி மட்டும்மல்லாது வெளியேவும் கம்பீர் மற்றும் கோலி ஆகியோருக்கு இடையிலான உறவு ஏழாம் பொருத்தம் என்று சொல்லலாம். இருவரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சனம் செய்து கொள்வார்கள். குறிப்பாக, கோலியின் கேப்டன்ஷிப் மீது கம்பீர் தொடர்ந்து விமர்சனங்களை வைத்துவருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் 2013 ஆம் ஆண்டு பெங்களூரூவில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின்போது முதன்முறையாக மோதல் வெளிப்பட்டது. கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் கோலி அவுட்டானவுடன் கம்பீரின் செய்கை கோலியை சீண்டியது. இதனால் இருவரும் வார்த்தைபோரில் களத்திலேயே ஈடுபட்டுக்கொண்டனர். அப்போது இந்த மோதல் பரபரப்பாக பேசப்பட்டது.

ஷாருக்கானுக்கு தடை

கொல்கத்தா நைட் ரைடரஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ஷாரூக்கான் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். 2012 ஆம் ஆண்டு மும்பை வான்கடே மைதானத்தில் நுழைந்த ஷாருக்கான், அங்கு பாதுக்காப்பு பணியில் இருந்த செக்யூரிட்டியுடன் தகராறில் ஈடுபட்டார். இந்த விஷயம் மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் ஷாருக்கானுக்கு வான்கடே மைதானத்தில் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த தடையை மும்பை கிரிக்கெட் வாரியம் நீக்கியது.

டோனியின் உக்கிரம்

கேப்டன் கூல் என அழைக்கப்படும் டோனி ஐ.பி.எல் போட்டியில் முதன்முறையாக தன்னுடைய இன்னொரு முகத்தை காண்பித்தார். 2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவர் உச்சகட்ட பரபரப்புக்கு இடையே வீசப்பட்டது. வெற்றி தோல்வியை ஒவ்வொரு பந்தும் தீர்மானிக்கும் என்ற நிலையில் அந்தப் போட்டி நடைபெற்றது. அப்போது, ஸ்டோக்ஸ் வீசிய பந்துக்கு நடுவர்கள் இருவேறு முடிவுகளை கூறியதால், தனது பொறுமையை இழந்து மைதானத்துக்குள் டோனி நுழைந்தார். இதற்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 50 விழுக்காடு அபராதமாக டோனிக்கு விதிக்கப்பட்டது.

அஸ்வினின் 'மன்கட்' சர்ச்சை

கிரிக்கெட் உலகில் மறக்கப்பட்ட 'மன்கட்' முறையை அஸ்வின் ஐ.பி.எல் - போட்டியில் அறிமுகப்படுத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதிய அந்த ஆட்டத்தில் களத்தில் பட்லர் பந்துவீச்சாளர் முனையில் இருந்தார். அப்போது, ஓவரை வீசிய அஸ்வின், கோட்டிற்கு வெளியே சென்ற பட்லரை மன்கட் முறையில் அவுட் செய்தார். அஸ்வினின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தாலும், கிரிக்கெட் ரூல்ஸில் இடம் உள்ளது என மற்றொரு தரப்பினர் ஆதரவும் தெரிவித்தனர்.

கவாஸ்கர் - அனுஷ்கா சர்ச்சை

2020 ஆம் ஆண்டு ஐ.பி.எல் போட்டியில் விராட் கோலியின் ஆட்டம் மோசமாக இருந்தது. இதுகுறித்து விமர்சனம் செய்த சுனில் கவாஸ்கர், விராட்கோலியின் ஆட்டத்தை, மனைவியுடன் ஒப்பிட்டு பேசினார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. அனுஷ்கா சர்மாவும் கவாஸ்கருக்கு தக்க பதிலடியை கொடுத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து