புதுடெல்லி : இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை நேற்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1கோடியே,28லட்சத்து,01,785 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1லட்சத்து,15ஆயிரத்து,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 630 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1லட்சத்து,66ஆயிரத்து,177 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1கோடியே,17லட்சத்து,92,135 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8லட்சத்து,43,473 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
நாடு முழுவதும் நேற்று வரை 8கோடியே,70லட்சத்து,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
ஒரு நாள் கொரோனா பாதிப்பில் பிரேசில், அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.
ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் பிரேசில், அமெரிக்காவை தாண்டி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது. உலக அளவிலான கொரோனா பாதிப்பு விவரங்களை தரவுகளுடன் வெளியிடும் வோர்ல்டோமீட்டர்ஸ் இணையதள விவரங்களின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலில் 82 ஆயிரத்து 869 பேருக்கும், அமெரிக்காவில் 62,283 பேருக்கும் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருநாளில் ஏற்பட்ட அதிக உயிரிழப்புகளை பொறுத்தவரை பிரேசில் முதலிடம் வகிக்கிறது. அந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4,211 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 905 பேரும் இந்தியாவில் 631 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.