3-வது அலையை சமாளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

Ma -Subramanian 2021 05 31

Source: provided

சென்னை : தமிழகத்தில் கொரோனா 3-வது அலையை சமாளிக்க ஒரு லட்சம் படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

கொரோனா 3-வது அலை என்பது யூகமாகவே கூறப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். இருந்தாலும் அதை சமாளிக்கும் வகையில் அரசு தயாராகி வருகிறது.  முதல் அலை தாக்கத்தின் போது கொரோனா சிகிச்சை மையங்கள் உருவாக்கப்பட்டு அதில் போடப்பட்டிருந்த படுக்கைகள் அனைத்தையும் கடந்த ஆட்சியில் அப்புறப்படுத்தி விட்டனர்.

அதனால் 2-வது அலையின்போது படுக்கைகள் ஏற்பாடு செய்வதில் சிரமம் ஏற்பட்டது. ஆனால் இப்போது எந்த படுக்கையையும் அப்புறப்படுத்த வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.  தற்போது 55 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளன. சிகிச்சையில் இருப்பவர்களையும் சேர்த்தால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கைகள் தயாராக உள்ளன. 69 சித்தா, ஆயுர்வேத சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அவற்றையும் அப்படியே வைத்திருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த அலையின் போது ஆக்சிஜன் பிரச்சினை ஏற்பட்டது. இனி அந்த பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. ஏனெனில் பல்லாயிரக்கணக்கான ஆக்சிஜன் செறிவூட்டிகள் வந்துள்ளன. அவை அனைத்தும் ஆஸ்பத்திரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தீவிர சிகிச்சைக்கு தேவைப்படும் ஆக்சிஜன் சேமிப்பு வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆக்சிஜன் உற்பத்திக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சலுகைகளை அறிவித்துள்ளார். தொழிற்பேட்டைகளில் இடம் வழங்குவதில் முன்னுரிமை, 30 சதவீத மானியம், உடனடியாக அனுமதி வழங்குதல் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளார். எனவே ஆக்சிஜன் உற்பத்தியும் அதிகரிக்கும்.

அனைத்து அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  3-வது அலை வந்தால் குழந்தைகள் அதிகளவில் பாதிக்கலாம் என்று கருதுவதால் அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகள் வார்டுகளில் கூடுதல் படுக்கை வசதிகள், தேவையான மருந்து, மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளன. இருந்தாலும் 2-வது அலை கட்டுக்குள் வந்திருப்பதால் பொதுமக்கள் சுய கட்டுப்பாட்டை தவிர்க்க கூடாது.

அடிக்கடி கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், தேவையில்லாமல் வெளியே செல்லுதல், கூட்டங்களில் பங்கெடுத்தல் ஆகியவற்றில் அதிக கவனமுடன் இருக்க வேண்டும். பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை எளிதாக வெல்ல முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து