தொற்று பாதிப்பால் 30 நாளில் இறந்திருந்தால் இறப்புச் சான்றிதழில் கொரோனா மரணம் என்று எழுத வேண்டும் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல்

Central-government 2021 07

Source: provided

புது டெல்லி: கொரோனா தொடர்பான சோதனைகள் நோயாளிக்கு தொற்றை  உறுதிப்படுத்திய நிலையில், அவர் 30 நாளில் அதன் பாதிப்பால் இறந்திருந்தால் அவரது  இறப்புச் சான்றிதழில் கொரோனா மரணம் என்று எழுத வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டில்  கொரோனா இறப்பு சான்றிழல் மற்றும் இழப்பீடு  வழங்கல் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கொரோனா இறப்புக்கான குறைந்தபட்ச  இழப்பீட்டை நிர்ணயிக்குமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

கடந்த ஜூன் 30-ம் தேதி அளித்த தீர்ப்பில்,  இறப்பு சான்றிதழ் விவகாரத்தில்,  கொரோனா மரணம் என்று எழுதி கொடுக்க உரிய  ஏற்பாடுகளை செய்யுமாறு மத்திய அரசை நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. அதன்படி,  கொரோனா இறப்பு சான்றிதழ்கள் குறித்த வழிகாட்டுதல்கள் விபரங்களை மத்திய அரசு  சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

தொடர்ந்து, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் மரணங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் மாநில அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன. அதன்படி, சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தால், அவருக்கான இறப்புச் சான்றிதழில் கொரோனா மரணம் என்று பதிவு செய்து சான்று வழங்க வேண்டும். ஏற்கனவே, சாதாரண முறையில் இறப்பு சான்று வாங்கியவர்கள், கொரோனாவால் இறந்திருந்தால் அவர்கள் புதியதாக விண்ணப்பித்து கொரோனா மரணம் என்று சான்று பெறலாம்.  ஆர்.டி-பி.சி.ஆர் அல்லது கொரோனா தொடர்பான பிற சோதனைகள் நோயாளிக்கு கொரோனாவை  உறுதிப்படுத்திய நிலையில், அவர் 30 நாளில் தொற்று பாதிப்பால் இறந்திருந்தால் அவரது  இறப்புச் சான்றிதழில் கொரோனா மரணம் என்று எழுத வேண்டும்.

இந்த இறப்பு  சான்றிதழ்கள் வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ வழங்கலாம். இருப்பினும்,  விஷம், தற்கொலை, கொலை அல்லது தற்செயலான மரணம் காரணமாக மரணம் ஏற்பட்டு,  அவருக்கு கொரோனா பாசிடிவ் இருந்தால், அவரது இறப்புச் சான்றிதழில் கொரோனா  மரணம் என்று குறிப்பிட வேண்டியதில்லை. இந்த புதிய இறப்புச் சான்றிதழை பெறுவதற்காக, அவர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழு அமைக்க வேண்டும். அவ்வாறு கிடைக்கப்படும் விண்ணப்பத்தை 30 நாட்களுக்குள் பரிசீலித்து சம்பந்தப்பட்ட குழு முடிவு எடுக்க வேண்டும். கொரோனா இறப்புச் சான்றிதழ் பெறுவதில், ஏதேனும் ஆட்சேபணை இருந்தால், அந்தந்த மாவட்ட கலெக்டரிடமும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

View all comments

வாசகர் கருத்து