முக்கிய செய்திகள்

பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றம்

வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021      தமிழகம்
poondi-Lake 2021 11 05

Source: provided

 சென்னை : பலத்த மழையால்  நீர்வரத்து அதிகமானதால் பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி வீதமும் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

சென்னை நகர மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கனமழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகமானது. நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் ஏரிக்கு வினாடிக்கு 7,036 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனை கருத்தில் கொண்டு ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பூண்டி ஏரியில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் அம்மாபள்ளி அணையில் இருந்து 12-வது முறையாக திறந்துவிடப்பட்ட தண்ணீர் நேற்று (வெள்ளிக்கிழமை) காலை பூண்டி ஏரிக்கு வந்தடைவதாக கூறப்படுகிறது. இதனால் பூண்டி ஏரியில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது. இதையடுத்து கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அதேபோல் தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் மதியம் கூடுதலாக ஆயிரம் கன அடி உயர்த்தி, வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழையால் மேலும் நீர்வரத்து அதிகரிக்க கூடும் என்பதால் தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரி நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து