முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி, புதுக்கோட்டையிலும் கனமழை - தவிக்கும் மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

திருச்சி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறக்கூடும் என்பதால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி கடலோரம் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக மத்திய மண்டலத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்குகிறது.

திருச்சி மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய நீடித்தது. காலையிலும் சாரல் மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 

அதிகபட்சமாக திருச்சி மாநகரில் திருச்சி டவுன், திருச்சி ஜங்சன், ஏர்போர்ட் மற்றும் பொன்மலை பகுதிகளில் 206.5 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் மாநகரில் எங்கு பார்த்தாலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய வண்ணம் உள்ளது. மீண்டும் கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்தது. மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

லால்குடி-51.80, நந்தியாறு அணைக்கட்டு-66.20, புள்ளம் பாடி-57.80, தேவிமங்கலம்-16.40, சமயபுரம்-37.40, சிறுகுடி-20, வாத்தலை அணைக்கட்டு-31, மணப்பாறை-57.40, பொன்னணியாறு அணை-45.80, கோவில்பட்டி-54.20, மருங்காபுரி-75.40, முசிறி- 15, புலிவலம்-32, தா.பேட்டை- 34, நவலூர் கொட்டப்பட்டு- 60.60, துவாக்குடி-57, கொட்டம்பட்டி-42, தென்பறநாடு- 49, துறையூர்-46.

திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகா பச்சமலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் துறையூரில் உள்ள 285 ஏக்கர் பெரிய ஏரி நள்ளிரவில் நிரம்பி கடை நீர் வழிந்தது.

கடந்த 2005-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது ஏரி நிரம்பியதால், அப்பகுதி மக்கள் நள்ளிரவிலும் கடைக்கால் வழியும் செச்சை முனீஸ்வரர் கோவிலில் கூடி வழிபாடு செய்து, பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

இதற்கிடையில் செல்லிபாளையம், சிக்கத்தம்பூர், கீரம்பூர் பகுதி ஏரிகள் ஏற்கனவே நிரம்பி இருந்த நிலையில், நேற்று பெய்த மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது. மேலும் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் அப்பகுதி முழுவதும் துண்டிக்கப்பட்டது. வெள்ளநீர் மற்றும் மின்சாரம் துண்டிப்பு ஆகியவற்றால் அப்பகுதி மக்கள் வீதிகளில் தவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், கந்தர்வகோட்டை, அறந்தாங்கி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல், ஆவுடையார்கோவில், விராலிமலை, இலுப்பூர், அன்னவாசல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் நேற்று முன் தினம் மாலை தொடங்கிய பலத்த மழை நேற்றும் தொடர்ந்தது.

இந்த மழையால் புதுக்கோட்டை நகர் பகுதியில் ஆங்காங்கே குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

திருச்சியில் கனமழை

திருச்சியில் பெய்து வரும் கனமழையால் கோரையாற்றில ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குழுமணி சாலையில் உள்ள செல்வநகர், அரவிந்த் நகர், சீதாலட்சுமி நகரில் உள்ள சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனிடையே தீயணைப்பு படையினர் அப்பகுதியில் சிக்கியவர்களை படகுகள் மூலம் மீட்டு வருகின்றனர்.

திருச்சியை சுற்றி பெய்துவந்த கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோரையாற்றின் இரண்டு கரையும தொட்டுக்கொண்டு வெள்ளநீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. மேலும், திருச்சியிலிருந்து மணப்பாறை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கருமண்டபம் பகுதியில் மழைநீரில் கடந்து செல்வதற்கு மிகவுள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சாலைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!