முக்கிய செய்திகள்

தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்த கோயம்பேட்டில் ஒரு ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டும்: மார்க்கெட் கமிட்டிக்கு ஐகோர்ட் உத்தரவு

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      தமிழகம்
Tomatoes 2021 11 23

தக்காளி ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு ஒரு ஏக்கர் பரப்பளவிற்குக் குறையாத இடத்தை ஒதுக்க வேண்டுமென கோயம்பேடு மார்க்கெட் கமிட்டிக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோயம்பேடு தக்காளி மைதானத்தைத் திறக்கக் கோரி தந்தை பெரியார் தக்காளி மொத்த வியாபாரிகள் சங்கம் வழக்குத் தொடர்ந்தது. அதில் வாகனங்களை நிறுத்தக்கூடிய இடத்தில் சிறு கடைகளின் உரிமையாளர்கள் விற்பனை செய்ததால் மைதானம் மூடப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தக்காளி விலை உயர்வைக் கருத்தில் லொண்டு தற்காலிகமாக வாகனங்ளை நிறுத்த அனுமதிக்க முடியுமா என சி.எம்.டி.ஏ. மற்றும் கோயம்பேடு மார்க்கெட் கமிட்டி ஆகியவற்றிற்கு நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மார்க்கெட் கமிட்டி தரப்பில், 800 வாகனங்ளை 8 இடங்களில் நிறுத்தும் அளவிற்கு வசதிகள் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சங்கத்தினரை அனுமதிக்காததால்தான் விலை உயர்ந்தது எனக் கூறுவது தவறு என்றும், அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் எவரும் தடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

கடந்த வாரத்தை விட தக்காளி விலை தற்போது குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தக்காளி விற்பனை இடத்திற்கு அருகில் உள்ள ஏ சாலை எஃப் பிளாக் அருகில் உள்ள இடத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. தக்காளியை லாரியிலிருந்து சிறு வாகனங்களுக்கு மாற்ற மட்டுமே காலி மைதானத்தைப் பயன்படுத்துவதாகவும், விற்பனை செய்ய மாட்டோம் எனவும் வியாபாரிகள் சங்கம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கபட்டது.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி, தக்காளி விலையைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், தற்காலிகமாக ஒரு ஏக்கருக்கும் குறையாத இடத்தை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வியாபாரிகளும் பொருட்களை ஏற்றி இறக்க மட்டும் நான்கு வாரங்களுக்கு இடைக்காலமாக ஒதுக்கும்படி மார்க்கெட் கமிட்டிக்கு உத்தரவிட்டார். இன்று (செவ்வாய் கிழமை) முதல் அந்த இடத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

சோதனை முறையில் இரண்டு வாரங்களுக்கு இந்த நடைமுறையைக் கடைப்பிடித்து, அதில் உள்ள சாதக பாதகங்களை இருதரப்பும் இரண்டு வாரங்களுக்குத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, பிரதான வழக்கின் விசாரணையை டிசம்பர் 15ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார். தொடர் மழை, வரத்துக் குறைவு, பிற மாநில வாகனங்கள் வராதது போன்ற காரணங்களால் அதிக அளவில் உயர்ந்துள்ள தக்காளி விலையைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து