முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரேசன் கடைகளில் காய்கறிகளை பாதி விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை: தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 6 டிசம்பர் 2021      அரசியல்
Image Unavailable

அனைத்து காய்கறிகளையும் நியாய விலைக் கடைகளில் பாதி விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கடந்த 24-ம் தேதி அன்று காய்கறிகளின் வெளிச்சந்தை விலையையும், தற்போதைய விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அனைத்துக் காய்கறிகளின் விலையும் இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. ஆனால் செய்தி குறிப்பிலோ அரசின் நடவடிக்கைகளால் காய்கறிகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பால் அரசுக்கு விளம்பரம் கிடைத்ததே தவிர மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை. மக்கள் கண்ணீர் விடும் அளவுக்கு காய்கறிகள், பழங்கள், பூக்களின் விலைகள் ஏறிக் கொண்டே செல்கின்றன. மளிகைப் பொருட்களை விட காய்கறிகளுக்கு மக்கள் அதிகம் செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது.

கொரோனா உச்சத்தில் இருக்கும்போது கூட இந்த அளவுக்கு காய்கறிகளின் விலை உயரவில்லை. அப்போது எல்லாம் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அப்போதைய  எதிர்க்கட்சித் தலைவர், தான் முதல்வராக வந்த பிறகு அதைவிட பன்மடங்கு காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருவதைப் பற்றி பேசாமல் இருப்பது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

எனவே முதல்வர் ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு அனைத்து காய்கறிகளின் விலையையும் குறைந்தபட்சம் பாதியாவது குறைக்கும் அளவுக்கு அனைத்து நியாய விலைக் கடைகள் மூலமும் காய்கறிகள் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து