முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதும் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேசன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

செவ்வாய்க்கிழமை, 4 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 

உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை போற்றும் தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும் போற்றுகின்ற நன்னாளாகவும், சாதி, மத, பேதமற்று நாம் அனைவரும் ஓரினம் - தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் வகையிலும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.  

இத்தகைய சிறப்புமிக்க தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் குடும்பங்களுக்கும், மஞ்சள் தூள், மிளகாள் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், நெய், மிளகு, புளி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, உளுத்தம்பருப்பு, உப்பு, ரவை, கோதுமை மாவு, வெல்லம், அரிசி, முந்திரிப்பருப்பு, திராட்சை, ஏலக்காய் ஆகிய  மளிகை பொருட்கள் அடங்கிய துணிப்பையுடன் கூடிய தொகுப்பு மற்றும் முழு கரும்பும் சேர்த்து 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூ.1,296.88 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். 

அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழகத்தில் வழங்கிடும் பணியினை தொடங்கி வைப்பதன் அடையாளமாக, நேற்று தலைமைச் செயலகத்தில், 10 குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். 

இச்சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை பெற்றிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அதிக எண்ணிக்கையில் நியாய விலைக் கடைகளுக்கு ஒரே  நேரத்தில் வருவதை தவிர்க்கவும், கொரோனா பெருந்தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற ஏதுவாகவும், பொங்கல் பரிசுத் தொகுப்பினை விநியோகத்திட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் அக்குடும்ப அட்டைதாரர்கள் சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பெற்றுக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் இ. பெரியசாமி, அர. சக்கரபாணி, மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுத்தின், உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையாளர் ராஜராமன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் மருத்துவர். பிரபாகர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து