முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி: குடியரசு தின விழாவில் பங்கேற்க கடும் கட்டுப்பாடுகள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022      இந்தியா
Image Unavailable

குடியரசு தின விழாவில் பங்கேற்க கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பார்வையாளர்களில் தடுப்பூசி செலுத்தியோருக்கு மட்டுமே அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிகழாண்டு டெல்லியில் குடியரசு தின விழா அணிவகுப்பைப் பார்வையிட அனுமதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை 70- 80 சதவீதம் குறைக்கப்பட்டுவிட்டதாகவும், அந்த வகையில் 5,000 முதல் 8,000 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெரியவர்களுக்கும், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர். அந்த வகையில், கொரோனா தடுப்பூசி இரு தவணைகளும் செலுத்திக் கொள்ளாதவர்களும், 15 வயதுக்குள்பட்ட சிறார்களும் குடியரசு நாள் விழாவில் பங்கேற்க அனுமதியில்லை.

தேசிய தலைநகரில் ஆண்டுதோறும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழா அணிவகுப்பைப் பார்வையிட சுமார் 25 ஆயிரம் பேர் வரை அனுமதிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா உருமாறிய ரகமான ஒமைக்ரான் பரவல் அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

குடியரசு நாள் விழாவில் பங்கேற்க வருவோருக்கு முக்கிய அறிவுறுத்தல்களை டெல்லி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. குடியரசு நாள் விழாவில் பங்கேற்க வருவோர், கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை கொண்டு வர வேண்டும். 

15 வயதுக்குள்பட்ட சிறார்களுக்கு நிச்சயமாக அனுமதியில்லை. பார்வையாளர்களுக்கான இருக்கைகள் காலை 7 மணி முதல் திறந்துவிடப்படும். எனவே அதற்கேற்ப வருகை தலாம். வாகன நிறுத்துமிடங்கள் மிகக் குறைவாக அனுமதிக்கப்பட்டிருப்பதால், பார்வையாளர்கள் குழுவாக சேர்ந்து ஒரே காரில் பயணிப்பது அல்லது வாடகைக் காரில் பயணிப்பது சிறந்தது.

பார்வையாளர்களை அனுமதிக்கும் முன்பு அடையாள அட்டை நிச்சயம் காண்பிக்கப்பட வேண்டும். கார் போன்ற வாகனங்களை நிறுத்துமிடத்தில், அதற்கான ரிமோட் சாவிகளை அங்கேயே ஒப்படைத்துவிட்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் செய்தியாளர்களிடம் கூறியது., பார்வையாளர்களின் வருகையைக் கட்டுப்படுத்தி, சமூக இடைவெளியை எப்போதும் கடைப்பிடிப்பதும், முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேசிய விழா கொரோனா பரவலுக்கு வித்திட்டு விடக் கூடாது என்பதுமே எங்களது நோக்கமாக உள்ளது. அதனால்தான் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 26 காலை 10 மணிக்கு பதிலாக 10.30 மணிக்குத் தொடங்கும். இதில் பங்கேற்கும் பெரியவர்கள் கட்டாயம் இரு தவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 15 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் ஒருதவணை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 15 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களுக்கு அனுமதி கிடையாது. அணிவகுப்பை தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு உள்ளதால், வீட்டிலிருந்தபடியே அதனைக் கண்டு களிக்குமாறு பொதுமக்களை ஊக்குவிப்போம்.

மேலும் பார்வையாளர்களின் வசதிக்காக ராஜபாதையின் இரு புறங்களிலும் தலா 5 திரைகள் வீதம் 10 பிரம்மாண்ட எல்இடி திரைகள் பொருத்தப்பட்டு, நிகழ்ச்சிகள் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து