முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் திருச்செந்தூர், ஸ்ரீரங்கம், மதுரை உள்ளிட்ட 10 திருக்கோயில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் : அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Sekar-Babu-2021-09-29

தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களில் வடபழனி முருகன் கோவில், பழனி தண்டாயுதபாணி கோவில், மதுரை மீனாட்சியம்மன் கோவில், திருத்தணி முருகன் கோவில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவில், திருச்செந்தூர் முருகன் கோவில், மருதமலை முருகன் கோவில் ஆகிய 10 கோவில்களில் நேற்று முதல் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.இந்த கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், புளியோதரை, தேங்காய் சாதம், லட்டு, வெண்பொங்கல், எலுமிச்சை சாதம் ஆகிய 6 வகையான பிரசாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நாள் முழுவதும் வழங்கப்படும்.  

வடபழனி முருகன் கோவிலில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு இதனை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

இலவச பிரசாதம் வழங்கும் திட்டம் மேலும் சில கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படும். தற்போது ஸ்ரீரங்கம், பழனி, திருச்செந்தூர், சமயபுரம், திருத்தணி ஆகிய 5 கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதுவும் தேவைக்கேற்ப மற்ற கோவில்களுக்கும் விரிவுபடுத்தப்படும். அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட 112 அறிவிப்புகளில் 100 அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதில் 1691 பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கி உள்ளன. மதுரை சித்திரை திருவிழாவில் நடந்த அசம்பாவித சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. வருங்காலங்களில் இந்த மாதிரி நடக்காத வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும்.

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கோவில்களுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் முககவசம் அணிவதை அரசு கட்டாயமாக்கி உள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் தரிசனம் செய்ய வேண்டும். இதுவரை 341 கோவில்களுக்கு மத்திய உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தின் தரச்சான்றிதழ் கிடைத்துள்ளது. வடபழனி கோவில் பிரசாதங்களும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பட்டுள்ளது. விரைவில் நல்ல முடிவு வரும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!