முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உணர்சிவசப்பட்ட ஹர்ஷல் படேல்..!

வியாழக்கிழமை, 5 மே 2022      விளையாட்டு
hashal-padel2022-05-05

Source: provided

நடப்பு ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றுள்ளது ஆர்சிபி. வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய அந்த அணி சென்னையை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. பேட்டிங், பவுலிங் என ஒரு அணியாக அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது ஆர்சிபி. இந்நிலையில், அந்த வெற்றி தருணத்தின் உணர்ச்சியை விவரணை செய்துள்ளார் ஹர்ஷல் படேல்.

"வெற்றி பெற்றதில் திருப்தி. லகான் திரைப்படத்தில் போட்டியில் வென்ற பிறகு அவர்களின் உணர்ச்சி எப்படி இருந்ததோ அப்படி உணர்கிறேன் நான். அதில் வெற்றிக்கு பிறகு மழை பொழியும். வெற்றி இல்லாமல் நாங்கள் வறண்டு கிடந்தோம். இப்போது அதை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி" என தெரிவித்துள்ளார் ஹர்ஷல் படேல்.

______________

அரசு கொடுத்த நிலத்தை 

ஒப்படைத்தார் கவாஸ்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் உலகக் கோப்பை வென்ற அணியில் விளையாடியவர் சுனில் கவாஸ்கர். 72 வயதான அவர் 1971 முதல் 1987 வரையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி உள்ளார். 125 டெஸ்ட் போட்டிகளில் 10,122 ரன்களும், 108 ஒருநாள் போட்டிகளில் 3092 ரன்களும் எடுத்துள்ளார் அவர். மும்பையை சேர்ந்தவர். ஓய்வுக்கு பிறகு போட்டிகளை வர்ணனை செய்வது, கிரிக்கெட் தொடர்பாக எழுதுவது போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

33 ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்ட்டிரா அரசு அவருக்கு மும்பை நகரின் பாந்த்ரா பகுதியில் இருபதாயிரம் சதுர அடி நிலத்தை வழங்கியது. அந்த இடத்தில் கிரிக்கெட் அகாடமி நிறுவும் நோக்கத்தில் மாநில அரசு அவருக்கு நிலத்தை வழங்கியிருந்தது. ஆனால் ஆண்டுகள் கடந்தும் அகாடமியை கவாஸ்கர் நிறுவவில்லை. அந்த நிலம் பயன்படுத்தப்படாமல் இருந்தது. சச்சின் டெண்டுல்கருடன் இணைந்து அதற்கான முயற்சிகளை அவர் முன்னெடுத்தார். ஆனால் அது முயற்சியாக மட்டுமே இருந்தது. இந்நிலையில், அந்த நிலத்தை மீண்டும் ஒப்படைக்குமாறு மகாராஷ்டிரா வீட்டுவசதி மேம்பாட்டு ஆணையம் கடந்த ஆண்டு அவரிடம் கோரிக்கை வைத்தது. நீண்ட ஆலோசனைக்குப் பின்னர் இப்போது நிலத்தை அரசு வசம் கவாஸ்கர் ஒப்படைத்துள்ளார். 

______________

ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்: 

ரியல் மாட்ரிட் இறுதிக்கு தகுதி

கிளப் அணிகள் இடையேயான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் நடந்த அரை இறுதியின் 2வது சுற்றில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்) மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) அணிகள் மோதின. 73வது நிமிடத்தில் மான்செஸ்டர் வீரர் ரியாத் மக்ரேஸ் கோல் அடித்தார். ரியல் மாட்ரிட் அணி வீரர்களால் 89வது நிமிடம் வரை கோல் அடிக்க முடியவில்லை. 

90வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் வீரர் ரோட்ரிகோ கோல் அடித்தார். நேரம் விரயத்துக்காக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் ரோட்ரிகோ (91வது நிமிடம்) மேலும் ஒரு கோல் அடித்தார். ஆட்ட முடிவில் ரியல் மாட்ரிட் 2-1 என்ற கோல் கணக்கில் இருந்தது. அரை இறுதியின் முதல் சுற்றில் மான்செஸ்டர் சிட்டி அணி 4-3 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை வீழ்த்தி இருந்தது. அரை இறுதி சுற்று முடிவில் 5-5 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது. இதனால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. 95வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதில் கரிம் பென்சிமா கோல் அடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

______________

விராட் கோலிக்கு 

வார்னர் அறிவுரை

விராட் கோலி மீண்டும் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த என்ன அறிவுரை கூறுவீர்கள் என டெல்லி அணி வீரர் டேவிட் வார்னரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த வார்னர்,  ‘விராட் கோலிக்கு ஒன்று தான் சொல்ல விரும்புகிறேன். "ஃபார்ம்" என்பது தற்காலிகமானது. "கிளாஸ்" என்பது தான் நிரந்தரம். எனவே அதை நீங்கள் தவற விடாதீர்கள். 

உங்களுக்கு இப்போது நடப்பது அனைத்து வீரர்களுக்கும் நடப்பது தான். இன்னும் 2 குழந்தைகளை பெற்றுக்கொண்டு, வாழ்க்கையையும் கிரிக்கெட்டையும் மேலும் மகிழ்ச்சியாக அனுபவியுங்கள்’ என கூறினார்.

_________________

மரடோனாவின் டீசர்ட் 

ரூ.71 கோடிக்கு ஏலம்

பிரபல கால்பந்து ஜாம்பவான் டியாகோ மரடோனா. அர்ஜெண்டினாவை சேர்ந்த அவர் கடந்த 2020ம் ஆண்டு மரணம் அடைந்தார். 1986ம் ஆண்டு உலககோப்பை கால்பந்து கால் இறுதி போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மரடோனா 2 கோல் அடித்தார். இதில் முதல் கோலை மரடோனா தலையால் அடிக்க முயற்சிக்கும் போது அவரது கையில் பந்துபட்டு கோல் கம்பத்துக்குள் சென்று விட்டது. இதை கவனிக்காத நடுவர் கோல் என்று அறிவித்தார். 

பின்னர் இந்த கோலை, ‘கடவுளின் கை” என்று மரடோனா கூறினார். அப்போட்டியின் போது வீரர்கள் தங்களது டீசர்ட்டுகளை (ஜெர்சி) பரிமாறி கொண்டபோது மரடோனாவின் டீசர்ட்டை இங்கிலாந்து வீரர் ஸ்டீவ் ஹாட்ஜ் பெற்றார். இந்த மரடோனா டீசர்ட் லண்டனில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த டீசர்ட், 9.2 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் போனது. இது இந்திய மதிப்பில் ரூ.71 கோடி ஆகும்.

_________________

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 

அடுத்த சுற்றிஸ் ரபேல் நடால்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள்  ஒற்றையர் பிரிவில்  நடைபெற்ற ஆட்டத்தில் 5 முறை மாட்ரிட் சாம்பியனானான ரபேல் நடால் - செர்பியாவின் கெக்மனோவிச் .ஆகியோர் மோதினர். காயத்தில் இருந்த மீண்டும் விளையாட்டிற்கு திரும்பிய நிலையில்  நடால் இந்த போட்டியில் பங்கேற்றார். 

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முடிவில் 6-1 ,7-6  என்ற செட் கணக்கில் கெக்மனோவிச்- ஐ வீழ்த்திய ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் ருமேனியாவின் சிமோனா ஹாலெப், துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீருடன் மோதினார்.   இந்த போட்டியில் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தி வெற்றி பெற்ற ஒன்ஸ் ஜபீர் அரைஇறுதிக்கு முன்னேறினார்.

 

______________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து