முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டி - 2022 பதக்கப்பட்டியலில் இந்தியா 7-ம் இடம்

வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
common-wealth- 2022 08 04

Source: provided

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.இதில் ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 78 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் துலிகா மான் வெள்ளிப் பதக்கம் வென்றார்.ஆண்களுக்கான பளுதூக்குதலின் (109 கிலோ) இறுதி போட்டியில் இந்தியாவின் லவ்ப்ரீத் சிங் இப்போட்டியில் மொத்தம் 355 கிலோ தூக்கி 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார். ஸ்குவாஷ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவுரவ் கோசல், வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.

ஆண்களுக்கான ( 109+ கிலோ) பளுதூக்குதலில் இறுதி போட்டியில் இந்திய வீரர் குர்தீப் சிங் பங்கேற்றார். அவர் இந்தப் போட்டியில் 390 கிலோ எடை தூக்கி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் இறுதி போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் 2.22 மீட்டர் உயரம் தாண்டி வெண்கலப்பதக்கத்தை கைபற்றினார். இதன் மூலம் 1 வெள்ளி , 4 வெண்கலம் வென்றது.காமன்வெல்த் போட்டி பதக்கப் பட்டியலில் இந்தியா 18 பதக்கங்களுடன் 7-ம் இடத்தில் நீடிக்கிறது.  

_______________

பாரா டேபிள் டென்னிஸ் போட்டி: 

அரையிறுதியில் பவினா பட்டேல் 

7-வது நாளான நேற்று இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் கலந்து கொள்கின்றனர். குறிப்பாக பேட்மிண்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு ஆட்டங்கள் நேற்று தொடங்கின.

அந்த வகையில் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவினா பட்டேல் தனது 3-வது குரூப் 1 ஒற்றையர் ஆட்டத்தில் நேற்று களம் கண்டார். பிஜியை சேர்ந்த அகானிசி லாடுவுடன் மோதிய பவினா பட்டேல் 11-1, 11-5, 11-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

________________

குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 

மேலும் ஒரு பதக்கம் உறுதி 

நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் அமித் பங்கால் ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த லெனான் முல்லிகன் உடன் மோதினார்.இந்த போட்டியில் அமித் பங்கால் 5-0 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. 

இதன் மூலம் அமித் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமித் பங்கால் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

______________

குத்துச்சண்டை அரை இறுதி:

இந்தியர்கள் 3 பேர் தகுதி

குத்து சண்டையில் இந்தியா சார்பில் 5 வீரர்கள், 5 வீராங்கனைகள் ஆக மொத்தம் 10 பேர் பங்கேற்று உள்ளனர். இதில் ஷிவதாபா, சுமித் குண்டு, ஆசிஷ் குமார் ஆகியோர் ஏற்கனவே கால் இறுதியில் தோற்று வெளியேறி இருந்தனர். கால் இறுதியில் 3 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். இதனால் குத்து சண்டையில் 3 பதக்கம் உறுதியானது. பெண்களுக்கான 50 கிலோ பிரிவில் நிஹாத் ஜரீன் கால் இறுதியில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ஹெலன் ஜோன்சை எதிர் கொண்டார்.

இதில் ஜரீன் 5-0 என்ற கணக்கில் வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். அரை இறுதியில் அவர் இங்கிலாந்தை சேர்ந்த ஸ்டப்லேயை 6-ந்தேதி சந்திக்கிறார். இதே போல 48 கிலோ பிரிவில் வீராங்கனை நித்து, 57 கிலோ பிரிவில் வீரர் ஹூசைன் ஆகியோரும் கால் இறுதியில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றனர். ஜப்பான் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற லவ்லினா கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். 70 கிலோ பிரிவில் பங்கேற்ற அவர் கால் இறுதியில் 2-3 என்ற கணக்கில் வேல்ஸ் நாட்டு வீராங்கனை ரோசியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தார்.

_____________

குத்துச்சண்டை அரையிறுதி :

இந்தியாவின் ஜெய்ஸ்மின் தகுதி

பெண்களுக்கான லைட்வெயிட் 60 கிலோ எடை பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா நியூசிலாந்தின் டிராய் கார்டனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜெய்ஸ்மின் 4-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். 

குத்துச்சண்டை போட்டியில் இரு அரையிறுதி போட்டிகளிலும் தோல்வி அடைந்தவர்களுக்கும் வெண்கல பதக்கம் உண்டு. இதன் மூலம் ஜெய்ஸ்மின் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.முன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான 51 கிலோ எடை பிரிவில் அமித் பங்கால் (இந்தியா) 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்தார்.

______________

ஸ்குவாஷ் - அடுத்த சுற்றுக்கு  

முன்னேறிய இந்திய இணை 

ஸ்குவாஷ் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஒன்றில் இந்தியாவின் சுனைனா சாரா குருவில்லா (23 வயது) -அனாஹத் சிங் (14 வயது) இணை இலங்கையை சேர்ந்த எஹெனி-சனித்மா ஜோடியுடன் மோதினர்.

இந்த போட்டியில் இந்திய இணை 11-9, 11-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ரவுண்ட் ஆப் 16 சுற்றில் இந்திய ஜோடி ஆஸ்திரேலியாவின் டோனா அவுஸ்லோபன் மற்றும் ரேச்சல் க்ரின்ஹாமை எதிர்கொள்கிறார்கள்.

____________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர இளமை சுறுசுறுப்புடன் வாழுவதற்கு | உடல் உஷ்ணத்தை தணிக்க | முதுமை அடைவதை தடுத்து, உடல் பலம் பெற | உடல் பலவீனம் நீங்க சர்க்கரை நோயினால் ஏற்படும் எரிச்சல், பாத எரிச்சல் - கை கால் எரிச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள்
கட்டிகள் கரைய, குணமாக, அடிபட்ட வீக்கம், காயங்களுக்கு, நரம்பு சிலந்தி, சிலந்தி புண், வீக்கம் ஆற சித்த மருத்துவ குறிப்புக்கள் மஞ்சள் காமாலை குணமாக | கல்லிரல் குறைபாடு நீங்க | இரத்தம் தூய்மையாக | பாண்டு தீர - சித்த மருத்துவ குறிப்புக்கள் பித்த நோய்கள் குணமாக | பித்த மயக்கம் தீர | பித்த நீர் மலத்துடன் வெளியேற | உடல் உஷ்ணத்தை தணிக்க | கல்லடைப்பு
View all comments

வாசகர் கருத்து