முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஓட்டு போட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது : மதுரை கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      தமிழகம்
EPS 2022-09-30

Source: provided

மதுரை : ஓட்டுப்போட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது என்று மதுரையில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். 

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்து மதுரை மாநகர், புறநகர் கிழக்கு, புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா பகுதியில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜு தலைமை வகித்தார்.  முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் வரவேற்று பேசினர். கூட்டத்தில் அ.தி.மு.க. இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றி பேசியதாவது, 

மதுரை எப்போதுமே எம்.ஜி.ஆரின் கோட்டையாகும். கடந்த சட்டசபை தேர்தலில் 10 தொகுதிகளில் 5 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சற்று கவனக்குறைவாக இருந்த காரணத்தால் திமுக ஆட்சிக்கு வந்து விட்டது. வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டசபைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளது. ஏனென்றால் தமிழகத்தின் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் ஆகி விட்டன. இதனால் என்ன நன்மை கிடைத்து இருக்கிறது என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

தி.மு.க.வுக்கு வாக்களித்த மக்கள் இப்போது வருத்தப்பட்டு வருகிறார்கள். தி.மு.க. ஆட்சி எப்போது போகும் என்று சொல்ல தொடங்கி விட்டனர். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் தி.மு.க. இதுவரை எந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? கருணாநிதிக்கு நூலகமும் நினைவு மண்டபமும் கட்டி வருகிறார்கள். கடலிலும் கருணாநிதியின் பேனா வைப்போம் என்று அடம் பிடிக்கிறார்கள். 

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்த்தப்பட்டு மதுரை உள்ளிட்ட ஐந்து மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் மீட்கப்பட்டது. மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் உலக தமிழ்ச் சங்கம், ஆம்னி பஸ் நிலையம், பெரிய ஆஸ்பத்திரி விரிவாக்க கட்டிடம், புற்றுநோய் சிகிச்சை மையம், கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டிடம், முல்லைப் பெரியாறு குடிநீர் திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே மேம்பாலங்கள், தடுப்பணைகள், பாதாள சாக்கடை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்திருக்கிறோம்.

ஆனால் கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை மட்டுமே தி.மு.க. தொடங்கி வைத்து வருகிறது.  அ.தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட பெண்களுக்கான இருசக்கர வாகன திட்டம், மாணவ மாணவிகளுக்கான மடிக்கணினி, ஏழைப் பெண்களுக்கான தாலிக்கு தங்கம் திட்டம் ஆகியவற்றை நிறுத்தி விட்டார்கள். தேர்தல் அறிக்கையில் தாலிக்கு தங்கம் திட்டத்தில் திருமண உதவித்தொகையை உயர்த்துவோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது அந்த திட்டத்தை நிறுத்தி விட்டார்கள்.

அதுபோல முதியோர் ஓய்வூதிய தொகையும் அதிகரிப்போம் என்று சொல்லி தற்போது பயனாளிகளின் எண்ணிக்கையும் குறைத்து விட்டார்கள். இதுபோல மக்களுக்கு பயன்படக்கூடிய திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றாமல் ரத்துசெய்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க.வின் இந்த செயல்பாடுகள் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் பிரதிபலிக்கும். தேர்தல் வாக்குறுதியில் சொத்து வரி, மின்கட்டணம் உயர்த்தப்படாது என்று தி.மு.க. சொல்லியிருந்தது. ஆனால் இப்போது 100 சதவீதம் சொத்து வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. மின் கட்டணத்தையும் அதிகரித்து விட்டார்கள்.

தேர்தலில் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் தி.மு.க. மறந்து விட்டது. இது எல்லாமே நடிப்பு என மக்கள் தற்போது புரிந்து கொண்டார்கள். அ.தி.மு.க.வை ஊழல் செய்தது என்று சொல்வதற்கு தி.மு.க.வுக்கு எந்த தகுதியும் கிடையாது. ஓட்டு போட்ட மக்களுக்கு தி.மு.க. அரசு வேட்டு வைத்து விட்டது. ஏழை, எளியவர்கள் மற்றும் அரசு ஊழியர்களையும் இந்த அரசு வஞ்சித்து விட்டது. இதன் மூலம் படித்தவர்களையும் படிக்காதவர்களையும் ஏமாற்றிய ஒரே அரசாக தி.மு.க. அரசு திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். 

முன்னதாக, கூட்டத்தில் கலந்து கொண்ட அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் செங்கோலை நினைவுப் பரிசாக வழங்கினர். 

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், கடம்பூர் ராஜூ, எம்.எல்.ஏ.க்கள் மேலூர் பெரியபுள்ளான், முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசன், மதுரை நகர நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, கு. திரவியம், எம்.எஸ். பாண்டியன், வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன், ராஜ்சத்யன், கணேஷ்பிரபு, பரவை ராஜா, பி.ஆர்.சி. மகாலிங்கம், பைக்காரா கருப்பசாமி, முத்துவேல், பாசறை ஜெயரீகன், முத்துராமலிங்கம், பி. குமார், ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், ராமசாமி, அன்பழகன், ரவிசந்திரன், கொரியர் கணேசன், அண்ணாநகர் முருகன், முத்துச்சாமி, எஸ்.போஸ், பெரியசெல்வம், திருப்பாலை நாகராஜன், சுகந்தி அசோக், புதூர் பாப்பா, பேச்சியம்மாள், வேணி, கல்யாணி, பி. புஷ்பா, லதா, பாண்டியம்மாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து