முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலநிலை மாற்ற நடவடிக்கை: சென்னையில் அன்புமணி தலைமையில் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம்

வியாழக்கிழமை, 6 அக்டோபர் 2022      உலகம்
Anbumani 2022-10-06

Source: provided

சென்னை: காலநிலை செயல் திட்டத்தை ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் பசுமை தாயகம் அமைப்பின் சார்பில் வரும் 9-ம் தேதி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மாரத்தான் ஓட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 

இந்தியா மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் இப்போது எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் மிக முக்கிய ஆபத்து காலநிலை மாற்றம் தான். அதனால் 2050-ம் ஆண்டுக்குள் புவிவெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக் கூடும்; அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆபத்து இப்போது இன்னும் வேகமாக நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. அதற்கான உதாரணங்களில் ஒன்று தான் அமெரிக்காவை தாக்கிய இயான் சூறாவளி ஆகும். 

தமிழ்நாட்டிற்கான மாநில காலநிலை மாற்ற செயல்திட்டம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. அதன்பின் ஓராண்டாகியும் அளவிடக் கூடிய வகையில், மாநில அளவிலான செயல் திட்டத்தின் எந்த அம்சமும் செயல்படுத்தப்படவில்லை. இந்த நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.  தமிழக சட்டப்பேரவையும், அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளும், பொது அமைப்புகளும், பெரு நிறுவனங்களும் காலநிலை மாற்ற அவசர நிலையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். 

புவிவெப்பமடைதலை தடுக்கவும், சமாளிக்கவுமான திட்டங்களை உள்ளடக்கிய காலநிலை செயல் திட்டத்தை ஒவ்வொரு மட்டத்திலும் உருவாக்கி செயல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் வரும் 9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை காலநிலை மாற்ற நடவடிக்கைக்கான சென்னை ஓட்டம் என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஓட்டத்திற்கு நான் தலைமை ஏற்க இருக்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து