முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தை தொடர்ந்து விரைவில் புதுச்சேரியிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடைச் சட்டம்

வியாழக்கிழமை, 23 மார்ச் 2023      இந்தியா
Pudhucherry-2023-03-23

Source: provided

புதுச்சேரி: மத்திய அரசு அனுமதி பெற்று ஆன்லைன் விளையாட்டுகளை புதுச்சேரியில் தடை செய்ய விரைவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்தார். திமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை அரசு ஏற்று பாஜக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

புதுவை சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசுகையில்: ''சுற்றுலா மற்றும் ஆன்மீகத்திற்கு புகழ்பெற்ற புதுவை மாநிலத்தில் சமீப காலமாக ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இந்த விளையாட்டில் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மூழ்குவதும், அதன் காரணமாக பணத்தை இழந்து, தற்கொலை முயற்சியில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. இந்த விளையாட்டுக்களை வீடுகளில் இருந்து தான் விளையாடுகிறார்கள். அதை 'கூகுள் பிளே ஸ்டோர்' மற்றும் 'ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவை தான் கண்டறிய முடியும் என்ற நிலை உள்ளது.

தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டால் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழக முதலமைச்சர் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்தார். அந்த குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றி, அந்த மசோதா ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்களை தடை செய்யும் உத்தரவை மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தில் இருந்து சென்றால் மட்டுமே அந்த விளையாட்டுக்களை தடை செய்யும் நிலை உள்ளது. எனவே புதுவை மாநிலத்திலும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிப்பது சம்பந்தமாக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் அதனை அரசின் தீர்மானமாக இயற்றி, ஆளுநர் ஒப்புதலோடு, மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்'' என்றார்.

இதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், சம்பத், செந்தில்குமார், கென்னடி ஆகியோரும் பேசினர். தொடர்ந்து பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம், ''இளைஞர்கள் நலனைக் காக்க ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு தடை அவசியம். இதை அரசு தீர்மானமாக கொண்டுவர பாஜக ஆதரவு தெரிவிக்கும்'' என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து