முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      தமிழகம்
Fishermen-2023-03-23

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடந்த 11-ம் தேதி காலை 7 மணியளவில் மீன்துறை அலுவலக அனுமதியுடன் 172 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன. இதில் ஆரோக்கியராஜ் (54) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அவர் மற்றும் அசோக் (28), கருப்பு (22), சக்தி (20) ஆகிய 4 பேரும் சென்றிருந்தனர். 

அவர்கள் அன்று நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான நெடுந்தீவை அடுத்த அனலைத் தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். கரையில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அந்த படகில் இருந்து விரித்திருந்த வலைகளை அறுத்து சேதப்படுத்தியுள்ளனர். 

மேலும் ஆரோக்கியராஜூக்கு சொந்தமான விசைப்படகை சிறைப்பிடித்து, அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

இதற்கிடையே அந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கைதான 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மீண்டும் இதே போல் எல்லைதாண்டி வந்து மீன் பிடித்தால் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரித்தார். 

இதையடுத்து விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 4 பேரும் இன்னும் ஓரிரு நாட்களில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து