முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை, மும்பை. கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் : தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சனிக்கிழமை, 25 மார்ச் 2023      தமிழகம்
CM-1 2023 03 25

Source: provided

மதுரை : சென்னை, மும்பை, கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். 

மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள கூடுதல் நீதிமன்ற கட்டிடங்களுக்கான அடிக்கல்  நாட்டு விழா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் மற்றும் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் திறப்பு விழாவில் கலந்து கொண்டு முதல்வர் மு.க .ஸ்டாலின் பேசியதாவது, 

இன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் கிளை மதுரையில்  அமைந்திருக்கிறது என்றால், அதற்கு அடித்தளமிட்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. 1973-ம் ஆண்டு முதல் முயற்சி செய்து, 2000-ம் ஆண்டு அவரது தலைமையில் அடிக்கல் நாட்டி, தென் மாவட்ட மக்களின் கனவை நனவாக்கினார். இன்று அந்த மாபெரும் கட்டிடம் கம்பீரமாக நிற்கிறது.

நீதி நிருவாகம், சுதந்திரமாகவும், நியாயமாகவும் செயல்படுவதற்கு ஏதுவாகவும், பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குதலை உறுதி செய்யும் வகையிலும், நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டிட வசதி, மனித ஆற்றல், பிற உட்கட்டமைப்பு வசதிகளை போதுமான அளவில் ஏற்படுத்திக் கொடுப்பது மிக அவசியம் என்பதை உணர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, அதற்கு முன்னுரிமை அளித்து, செயல்பட்டு வருகிறது. 

இந்த அரசு பதவியேற்ற 2021 மே மாதம் முதல், இன்று வரையில், புதிய நீதிமன்றங்களை அமைக்க தேவையான நீதிபதிகள், அலுவலர்கள் பணியிடங்களை உருவாக்கி 106 கோடியே 77 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

6 மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 7 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், ஒரு கூடுதல் சார்பு நீதிமன்றம் மற்றும் ஒரு மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் உள்ளிட்ட 44 புதிய நீதிமன்றங்களை அமைப்பதற்கு ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

3 வணிகச் சட்டங்களுக்கான தனி நீதிமன்றங்கள், மாவட்ட நீதிபதி  நிலையில், கோயம்புத்தூர், சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அமைப்பதற்கும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.  கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இயங்கி வரும் 160 மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில், 60 நீதிமன்றங்களை ஒரே கட்டிடத்துக்கு இடமாற்றம் செய்ய ஏதுவாக, 315 கோடி ரூபாய் செலவில் பல்லடுக்கு மாடிகள் கொண்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம் கட்டுவதற்கு  அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியின் கட்டிடத்தை அதன் பாரம்பரியம் சிதையாமல் புதுப்பிக்க  23 கோடி ரூபாய்  அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.  

புதியதாக நீதிமன்றக் கட்டிடங்கள் கட்டுதல், குடியிருப்புக் கட்டிடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டிடங்களைப் பராமரித்தல் ஆகிய பணிகளுக்கு 297 கோடி ரூபாய்க்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வழக்குரைஞர் நல நிதிக்கு அரசு சார்பில் 8 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளதோடு, வழக்குரைஞர்களுக்கான சேமநல நிதி 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.   

புதியதாக பதிவு செய்யப்பட்ட 1000 இளம் வழக்குரைஞர்களுக்கு, ஊக்கத் தொகையாக 3 ஆயிரம் ரூபாய் மாதம்தோறும் வழங்கிட ஒப்பளிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.  தமிழ்நாடு வழக்குரைஞர்களின் எழுத்தர் நலநிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய், இறந்த வழக்குரைஞர்களின் எழுத்தர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.  இப்படி பல்வேறு செயல்களை செய்து வருகிறோம். 

எனவே, நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சிறப்பாக மேற்கொள்ளும் என்று உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கு மூன்று வேண்டுகோள், நீதித்துறை தன்னிச்சையாக சட்ட நீதியும் சமூக நீதியும் இணைந்து செயல்பட வேண்டும். சென்னை மும்பை கொல்கத்தாவில் சுப்ரீம் கோர்ட் கிளை அமைக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை ஒன்றிய அரசும், சுப்ரீம் கோர்ட்டும் நிறைவேற்றி தர வேண்டும். ஐகோர்ட்டில் தமிழ் மொழி வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி கடைப்பிடிக்க வேண்டும்

எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசும், நீதித் துறையும், உச்ச நீதிமன்றமும் நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். நீதித்துறையானது சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கி ஒவ்வொரு சாமனியனின் இறுதி நம்பிக்கையையும் காப்பாற்றட்டும். நீதித்துறையின் செயல்பாடுகள் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும். சட்ட நீதியும், சமூக நீதியும் இணைந்து கிடைக்க நீதித்துறை அமைப்புக்கள் வழிவகை செய்ய வேண்டும்.  இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து