முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூரில் 8-வது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
Income-tax 2023-05-26

Source: provided

கரூர் : கரூரில் நேற்று 8-வது நாளாக வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கரூரில் கடந்த 26-ம் தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.

இதனால் சோதனையை கைவிட்டு அதிகாரிகள் சென்றனர். இதனையடுத்து மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்புடன் தொடர்ந்து கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையின் போது ஒரு சில இடங்களுக்கு வருமான வரித்துறையினர் சீல் வைத்தனர். மேலும் ஒருவருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் 8-வது நாளாக நேற்றும் கரூர் ராமகிஷ்ணபுரம், மாயனூர், ராயனூர் என பல்வேறு பகுதிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்தசோதனையின் போது துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையில் 20-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இதற்கிடையில் சோதனையின் போது அதிகாரிகளை தாக்கியதாக வந்த புகாரின் பேரில் போலீசார் 18 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 11 பேர் ஜாமீன் கேட்டு கரூர் ஜேஎம்கோர்ட் 1-லும், 7 பேர் ஜேஎம்கோர்ட் 2-லும் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதிகள், 11 பேர் ராயவேலூரில் தங்கி வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்திலும், 7 பேர் கடலூரில் தங்கியிருந்து கடலூர் போலீஸ் நிலையத்திலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து