முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: மல்யுத்த வீரர்களின் போராட்டம் வாபஸ் : பஜ்ரங் புனியா - சாக்ஷி மாலிக் கூட்டாக அறிவிப்பு

புதன்கிழமை, 7 ஜூன் 2023      விளையாட்டு
Wrestler 2023-05-14

Source: provided

புதுடெல்லி : மத்திய அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை தற்காலிக வாபஸ் பெறப்படுவதாக மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் கூட்டாக அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், பாலியல் வழக்கு தொடர்பாக பிரிஜ் பூஷணிடம் டெல்லி போலீசார் இதுவரை 2 முறை விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை சரண்சிங் கைது செய்யப்படவில்லை.

அதேவேளை, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷணை கைது செய்ய வேண்டும் என கூறி மலியுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் நாட்டுக்காக வாங்கிய பதக்கங்களை கங்கை நதியில் வீச முயற்சித்தனர். ஆனால், விவசாய சங்கத்தினர் தலையிட்டு பதக்கங்களை கங்கையில் வீசும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.

இந்நிலையில், பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷணை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.

இதனை ஏற்று கொண்ட மல்யுத்த வீரர்கள் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் டிகாயிட் விளையாட்டு மந்திரி அனுராக் தாகூரை அவரது வீட்டில் நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய அமைச்சர் அனுராக் தாகூரின் அழைப்பை ஏற்று பேச்சுவார்த்தைக்கு சென்ற மல்யுத்த வீராங்கனைகள், அவரிடம் 5 முக்கிய கோரிக்கைகளை வைத்தாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், மத்திய விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்கூரை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாசெய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது., டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்படுகிறது. ஜூன் 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணை முடிவடையும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி உள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். பாலியல் புகாரில் மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷனிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜூன் 15-ம் தேதிக்குள் பிரிஜ் பூஷன் மீதான விசாரணை நிறைவு பெறும். ஜூன் 15ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என்றார்.

ஜூன் 15-ம் தேதி வரை எந்தவித போராட்டங்களையும் நடத்த மாட்டோம் என மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் கூறினார். டெல்லியில் மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மல்யுத்த வீரர் மற்றும் வீராங்கனைகள் கூட்டாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிகமாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து