முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் சிறந்த பீல்டர் விருது

திங்கட்கிழமை, 10 ஜூன் 2024      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயார்க்கில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிர்ணயித்த 120 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 6 ரன் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பும்ராவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்நிலையில் ஐ.சி.சி. தொடர்களில் ஒவ்வொரு போட்டியிலும் சிறந்து விளங்கும் இந்திய பீல்டருக்கு பி.சி.சி.ஐ. விருது வழங்கி கவுரவித்து வருகிறது. ஆட்டத்தில் இந்தியாவின் சிறந்த பீல்டர் விருதை விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் தட்டிச்சென்றார். இதையடுத்து அந்த விருதை இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி ரிஷப் பண்டுக்கு அணிவித்தார். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

_______________________________________________________________________

வெளியேறியது ஓமன் அணி

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய நேரப்படி நடைபெற்ற 20வது லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - ஓமன் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஓமன் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் எடுத்தது. ஓமன் தரப்பில் அதிகபட்சமாக பிரதிக் அதவலே 54 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து தரப்பில் சப்யான் ஷெரீப் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 

இதையடுத்து 151 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராண்டன் மெக்முல்லன் 61 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் ஸ்காட்லாந்து அணி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதேவேளையில் 3 ஆட்டங்களில் ஆடி அனைத்திலும் தோல்வி கண்டுள்ள ஓமன் நடப்பு உலகக்கோப்பை தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியது. ஓமன் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை வரும் 13ம் தேதி எதிர்கொள்கிறது.

_______________________________________________________________________

இந்தியா வெற்றி: சச்சின் ட்வீட்

 நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘குரூப் - ஏ’ போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி வென்றது. இந்நிலையில், இந்தப் போட்டியை நேரில் கண்டு ரசித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்வீட் செய்துள்ளார். “இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி புதிய கண்டத்தில் நடைபெற்றது. ஆனாலும், ஆட்டத்தில் அதே முடிவு தான். டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் ஆட்டமாக அறியப்படுகிறது. ஆனால், நியூயார்க்கில் பவுலர்களின் ஆட்டத்திறனை நம்மால் பார்க்க முடிந்தது. இந்த போட்டி மிகவும் த்ரில்லாக இருந்தது. அதோடு அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டின் அற்புத காட்சி ஆட்டமாகவும் இது அமைந்திருந்தது. இந்திய அணி சிறப்பாக ஆடியது” என சச்சின் டெண்டுல்கர் தனது ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 19 ஓவர்களில், 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. இருந்தும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 113 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது. இதன் மூலம் 6 ரன்களில் இந்தியா வெற்றி பெற்றது. இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக இந்தப் போட்டியில் பந்து வீசி இருந்தனர். பும்ரா அற்புதமாக பந்து வீசி ஆட்டத்தை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

_______________________________________________________________________

கேரி கிறிஸ்டன் பேட்டி

இந்தியாவுக்கு எதிரான தோல்விக்கு பின்னர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் அளித்த பேட்டியில் கூறியதாவது, இவர்கள் அனைவரும் சர்வதேச வீரர்கள். இவர்கள் சிறப்பாக செயல்படாத பொழுது அழுத்தம் வெளியில் இருந்து வரும் என்று நன்றாகத் தெரியும். இது புரிந்து கொள்ளக் கூடியதுதான். இவர்களில் பலரும் வெளியில் உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட் விளையாடி வருகிறார்கள். இவர்கள் தங்களுடைய ஆட்டத்தை எப்படி முன்னோக்கிக் கொண்டு செல்லப் போகிறார்கள் என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

சேசிங்கின் போது ஒன்று, இரண்டு வீதம் எடுக்கவும், தவறான பந்து வந்தால் அதை பவுண்டரி அடிக்கவும் வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. எல்லாமே மிகச் சரியாகத்தான் சென்று கொண்டிருந்தது. ஆனால் பதினைந்தாவது ஓவரில் இருந்து எல்லாம் மாறியது. அங்கிருந்து நாங்கள் விக்கெட்டுகளை இழந்தோம். இதன் காரணமாக பவுண்டரிகள் தேவைப்பட்டது. இது கடினமான ஒன்று. நாங்கள் முதல் 15 ஓவர்களில் என்ன செய்தோமோ அதையே செய்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

_______________________________________________________________________

கண்ணீர் விட்டு அழுத நசீம்

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரீத் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் ஒரு கட்டத்தில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி 4 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, 8-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த நசீம் ஷா இரண்டு பவுண்டரிகளை விளாசினார். ஆனால், அவரால் எஞ்சிய 6 ரன்களை எடுக்க முடியவில்லை.

இதனால், வெற்றியின் அருகில் வரை வந்தும் வெற்றி பெற முடியவில்லையே என்ற வேதனையில் நசீம் ஷா மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுதார். அவரை சக பேட்ஸ்மேனான ஷாகின் அப்ரிடி ஆறுதல் கூறி தேற்றினார். தோல்வியால் மிகுந்த வருத்தத்தில் இருந்த நசீம் ஷாவுக்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஆறுதல் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து