முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்க வாய்ப்பு உள்ளது: திருமாவளவன்

வியாழக்கிழமை, 11 டிசம்பர் 2025      தமிழகம்
Thirumavalavan 2024-06-26

சென்னை, தமிழ்நாட்டில் மக்களின் வாக்குரிமையை பறிக்கிற வாய்ப்பு உள்ளது  நாடாளுமன்றத்தில் திருமாவளவன் தெரிவித்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

எஸ்.ஐ.ஆர். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை கண்டித்து நாடாளுமன்றத்தில் திருமாவளவன் ஆற்றிய உரை:-

அவைத் தலைவருக்கு வணக்கம். எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை நாட்டில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் இதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. 

எஸ்.ஐ.ஆர். தேர்தல் காலம் அல்லாத பிறகாலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று. வழக்கமாக வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை சுருக்க திருத்தம் அல்லது தீவிர திருத்தம் என்கிற பெயரில் அவ்வப்போது நடந்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது வாக்காளர்களின் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஒரு நடவடிக்கையாக இதனை மேற்கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி செயல்படக்கூடிய தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளரின் குடியுரிமையை சோதிக்க அதிகாரம் கொண்டிருக்கிறதா? அதிகார வரம்பை மீறி தேர்தல் ஆணையம் இப்படி செயல்படுவது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகும். வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் இந்த மண்ணின் மைந்தர்களின் குடியுரிமையை பறிக்கும் முயற்சியாக இது அமைந்திருக்கிறது. பீகாரில் நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் 47 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவி வரக்கூடியவர்களுக்கு வாக்குரிமை அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக ஆளும் கட்சித் தரப்பிலும் தேர்தல் ஆணையத்தின் தரப்பிலும் சொல்லப்படுகிறது. ஆனால் பீகாரில் நீக்கம் செய்யப்பட்டிருக்கின்ற 47 லட்சம் பேரில் யாராவது ஒருவர் அண்டைய நாட்டைச் சார்ந்தவர் என்று அடையாளம் காட்ட முடியுமா? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட அத்தனை பேரும் இந்திய குடிமக்கள். பீகாரை சார்ந்த மண்ணின் மைந்தர்கள். ஆக இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பது மட்டுமில்லாமல் குடியுரிமையையும் பறிக்கின்ற முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதைத்தான் அரசியல் நிர்ணய சபையில் அம்பேத்கர் பேசுகிறபோது எதிர்காலத்தில் இந்த நாட்டின் குடிமக்களின் வாக்குரிமையை பறிக்கிற நிலை உருவாகும் என்கின்ற அச்சத்தை வெளிப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன் வைத்தார். அந்தக் கோரிக்கை எவ்வளவு நியாயமானது என்பதை இந்தச் சூழலில் எண்ணிப் பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம். அம்பேத்கர் முன்வைத்த அந்தக் கோரிக்கையை நான் மீண்டும் இந்த அவையில் வழிமொழிய கடமைப்பட்டிருக்கிறேன். இந்த குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும். அதுதான் இன்றைக்கு மிக முக்கியமான ஒரு கோரிக்கையாக இருக்கிறது என்பதை நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

தேர்தல் ஜனநாயகம் நமது தேசத்தின் உயிர் மூச்சு கொள்கையாகும். தேர்தல் ஜனநாயகத்தை பாதுகாப்பதிலும் அதனை வெற்றிகரமாக இயங்கச் செய்வதிலும் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்க வேண்டும். பிஜேபி ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து தேர்தல் ஆணையம் உள்ளிட்ட முக்கியமான அரசு நிறுவனங்கள் அரசியல் தலையீடு உள்ள சிக்கலாக மாறியிருக்கிறது. தேர்தல் ஆணையம் மட்டுமில்லாமல் புலனாய்வு நிறுவனங்கள் நீதித்துறைகள் இவை அனைத்திலும் இன்றைக்கு ஆளுங்கட்சியினரின் தலையீடு இருக்கிறது. தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஏதுவாக செயல்பட்டு வருகிறது என்பதை நாடே இன்றைக்கு உணர்ந்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.

தேர்தல் ஆணையத்திற்கு குடியுரிமையை பரிசோதிக்கிற எந்த அதிகாரமும் இல்லை. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் அந்த அதிகாரத்தை தேர்தல் ஆணையத்திற்கு வழங்காத போது சி.ஏ.ஏ.  சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எப்படி அது துணிந்தது? 13 ஆவணங்களை கூறுகிறது. இந்த 13 ஆவணங்களும் குடியுரிமையை பரிசோதிப்பதற்கான ஆவணங்கள். எனவே எஸ்.ஐ.ஆர். என்கிற இந்த நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியை கைவிட வேண்டும். 

தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்களின் வாக்குரிமையைப் பறிக்கிற வாய்ப்பு இருப்பதாக தெரியவருகிறது. இது எந்த வகையிலும் ஏற்க முடியாது. அண்டை நாடுகளிலிருந்து ஊடுருவல் நடக்கிற மாநிலங்களில் தமிழ்நாடு ஒருபோதும் இடம்பெறாது. இலங்கைத் தமிழர்கள் அங்கே வருகிறார்கள் என்றாலும் கூட அவர்கள் சட்ட விரோதமாக குடியேறவில்லை. அரசின் அனுமதி பெற்று தான் தங்கியிருக்கிறார்கள். ஆகவே, எந்த வகையிலும் இந்த நடவடிக்கையை ஏற்க முடியாத சூழல் உள்ளது. இதனை உடனடியாக கைவிட வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் முன்மொழிந்த கோரிக்கையை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். வாக்குரிமையை அடிப்படை உரிமையாக்க வேண்டும். குடியுரிமையை பரிசோதிக்கிற முயற்சியாக இதை மேற்கொள்ளக் கூடாது தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் பதிவு செய்து இந்த  ஈ.வி.எம். முறையை கைவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து முடிக்கிறேன். நன்றி வணக்கம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து