பத்மநாபா கோயிலின் நகை கணக்கிடும் பணி ஆரம்பம்

செவ்வாய்க்கிழமை, 21 பெப்ரவரி 2012      ஆன்மிகம்
Image Unavailable

திருவனந்தபுரம்,பிப்.21 - திருவனந்தபுரம் பத்மநாபாசுவாமி கோயில் நகைகள் கணக்கிடும் பணி நேற்று பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. 108 வைணவ ஸ்தலங்களில் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபாசுவாமி கோயிலும் ஒன்றாகும். இந்த கோயிலில் 6 ரகசிய அறைகள் திறக்கப்படாமலேயே இருந்தது. அந்த அறைகளை திறக்க வேண்டும் என்று கோரி சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு அந்த ரகசிய அறைகளை திறக்கும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி அந்த 6 அறைகளில் முதலாவது அறை திறக்கப்பட்டது. திறந்து பார்த்தால் உலகமே அதிசயப்படும் வகையில் தங்கக் கட்டிகள், தங்க நகைகள் ,வைர நெக்லஸ்கள், வைர குவியல்கள், வைடூரியங்கள் பவலங்கள்,முத்துக்கள் ஆகியவை ஏராளமாக இருப்பது தெரியவந்தது. அவைகள் எடுத்து கொண்டுவரப்பட்டது. அதேமாதிரி திறக்கப்பட்ட மற்ற 4 அறைகளிலும் அதேமாதிரி பொக்கிஷங்கள் இருந்தன. 6-வது அறையை திறக்க முயற்சி செய்தபோது அதை திறக்கக்கூடாது என்று கூறி சுப்ரீம்கோர்ட்டில் கோயில் அறக்கட்டளை தலைவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால் அந்த அறை இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. இந்த நிலையில் திறக்கப்பட்ட 5 அறைகளில் இருந்து கண்டு எடுக்கப்பட்ட நகைகள், வைரங்கள், முத்துக்கள், வைடூரியங்கள், பவலங்கள் ஆகியவைகளை மதிப்பிடும்படி சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று 4 பேர் கொண்ட குழு முன்பு மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியது. ஒவ்வொரு நகையையும் மதிப்பீடு செய்ய குறைந்தது 20 நிமிடமாவது ஆகும் என்று கூறப்படுகிறது. அதனால் மதிப்பீடு செய்யும் பணியை விரைவு படுத்த கெல்ட்ரான் மற்றும் இஸ்ரோ நிறுவனத்திடம் இருந்து உயர்தொழில்நுட்ப மிஷின்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. நகை மதிப்பீடு செய்யப்படும் இடம்,மதிப்பீட்டில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கடும் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தற்போது எடுக்கப்பட்டுள்ள நகைகளின் மதிப்பு சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் 6-வது ரகசிய அறை இன்னும் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: