முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏ.கே. அந்தோணியை தலைமை தளபதி வி.கே.சிங் சந்திப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ஏப்.- 3 - ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் கொள்முதல் செய்வது தொடர்பாக ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணியை ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்றது.  பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதம் வெளியான ஒரு சில நாட்களே கழிந்துள்ள நிலையில் ஏ.கே. அந்தோணியை வி.கே.சிங் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வயது வரம்பு விவகாரத்தில் தோல்வி அடைந்த வி.கே. சிங், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் ராணுவத்திற்கு அதிக அளவு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. தற்போது ஒரு இருக்கும் ராணுவ தளவாடங்களில் பல பழையதாக போய்விட்டது. ஒரு சில கருவிகளை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. ராணுவத்தை பலப்படுத்த வேண்டும். எல்லையில் சீனாவும் பாகிஸ்தானும் தனது ராணுவ வலிமையை அதிகரித்து வருகிறது. ஆனால் மத்திய அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்கிறது என்று வி.கே. சிங் கூறியிருந்தார். இந்த கடிதம் எப்படியோ பத்திரிகைகளுக்கு கிடைத்து செய்தியாக வெளிவந்துவிட்டது. இதனால் வி.கே. சிங் மீது மத்திய அரசு கோபம் அடைந்திருந்தது. இந்த கடிதம் வெளியாகி ஒரு சில நாட்களே ஆகின்றன. அதற்குள் ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணியை வி.கே.சிங் சந்தித்து பேசி உள்ளார். அந்த சந்திப்பின்போது இந்திய ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்குவது தொடர்பாக அவர்கள் விவாதித்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சந்திப்பில் ராணுவ அமைச்சக உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏ.கே. அந்தோணி தலைமையில் ராணுவ ஆயுத கொள்முதல் கவுன்சில் கூட்டமும் தனியாக நடந்தது. இதில் வி.கே. சிங் மற்றும் கடற்படை தலைமை தளபதி அட்மிரல் நிர்மல் வர்மா,விமானப்படை தலைமை தளபதி மார்ஷல் என்.ஏ.கே.பிரவுனே ஆகியோரும் கலந்துகொண்டனர். ராணுவ அமைச்சகத்தின் உயர்மட்ட குழுவான ராணுவ கொள்முதல் கவுன்சிலானது முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்கள் குறித்து விவாதித்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்