முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர்கால அடிப்படையில் சாத்தூரில் அடிப்படை வசதிகள்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, மார்ச் 26 - அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சாத்தூர் தொகுதி மக்களின் நலன் கருதி இந்த தொகுதி முழுவதும் அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்துதரப்படும் என்று அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.பி.உதயகுமார் வாக்குறுதி அளித்தார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக மாநில மாணவரணி செயலாளரும் வழக்கறிஞருமான ஆர்.பி.உதயகுமார் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் மக்களை நேரில் சந்தித்து வீதி வீதியா வீடு வீடாகச் சென்று அ.தி.மு.க. விற்கு ஆதரவு திரட்டி வருகிறார். அப்போது அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் ஜெயலலிதாவின் தலைமையில் மீண்டும் அமைந்தவுடன் சாத்தூர் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவுடன் சாத்தூர் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலப்பணிகள் உடனடியாக செய்து தரப்படும் என்று ஆர்.பி.உதயகுமார் வாக்குறுதி அளித்துள்ளார். இதுகுறித்து அவர் பிரச்சாரத்தின்போது கூறியதாவது:-

சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும். கல்வி வளர்ச்சிக்காக சாத்தூர் தொகுதி முழுவதும் அரசின் சார்பில் நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், அரசு கலைக்கல்லூரிகள், தொழில்நுட்ப, பொறியியல் கல்லூரிகள், தொழிற்பயிற்சி மையங்கள், மாணவ, மாணவிகள் தங்கி படிக்க இலவச விடுதிகள் ஏற்படுத்தி தரப்படும். 

சாத்தூர் பேருந்து நிலையம் அரசு பொது மருத்துவமனை விஸ்தரிக்கப்படும். பயணிகள் விடுதி, சுற்றுலா பயணிகளுக்கான சிறப்பு பூங்காக்கள், தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். சாத்தூர் - படந்தால் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்தை தடுக்க மேம்பாலம் கட்டித்தரப்படும். ஆதரவற்ற முதியோர் அனைவருக்கும் அரசு இலவச விடுதிகள் அமைத்து தரப்படும். விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட தாய்மார்கள், முதியோர், ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு பாரபட்சமின்றி அரசு உதவித்தொகை கிடைக்க ஏற்பாடு செய்வேன். கிராமங்கள்தோறும் சாலை வசதி, பஸ் போக்குவரத்து வசதி, பாலங்கள், இணைப்பு சாலைகள், சிமிண்ட் சாலைகள், நவீன கழிப்பறை, கூடுதல் பேருந்து வசதிகள் செய்துதரப்படும். 

சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் அமைத்துத் தரப்படும். தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய விபத்து சிறப்பு மருத்துவமனை அமைத்துத் தரப்படும். ஆலங்குளம் அரசு சிமிண்ட் ஆலை நவீனப்படுத்தப்பட்டு உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதன்மூலம் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். குடிநீர், மின் விநியோகம், பொது சுகாதாரம், ரேசன் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony