முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதிய நிபந்தனையால் கலெக்டரை மீட்பதில் முட்டுக்கட்டை

வெள்ளிக்கிழமை, 27 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

ராய்ப்பூர், ஏப்.28 - கடத்திச்செல்லப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ் பால் மேனனை விடுவிக்க வேண்டும் என்றால் சிறையில் உள்ள தங்களது மேலும் 9 தோழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். இதனால் கலெக்டரை மீட்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள சுக்மா மாவட்ட கலெக்டராக உள்ளவர் அலெக்ஸ்பால் மேனன். இவர் கடந்த 20 ம் தேதி அரசு விழா ஒன்றில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும்போது மாவோயிஸ்ட்டு தீவிரவாதிகளால் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார். இந்த சம்பவத்தின்போது மாவட்ட கலெக்டரின் 2 மெய்க்காவலர்கள் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அலெக்ஸ் பால் மேனன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவரை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மமோகன்சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே வேண்டுகோள் விடுத்துள்ளார். பால் மேனனை மீட்க சத்தீஷ்கர் முதல்வர் ராமன்சிங்கும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக மாவோயிஸ்ட்டு தீவிரவாத குழுக்களின் தலைவர்களுடன் சத்தீஷ்கர் மாநில அரசு தூதர்கள் நேற்று முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சிறையில் உள்ள 8தீவிரவாதிகளை விடுதலை செய்தால்தான் கலெக்டரை விடுதலை செய்வோம் என்று மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று இரண்டாவது நாளாகவும் நடைபெற்றது. அப்போது சிறையில் உள்ள மேலும் 9 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் புதிய நிபந்தனை வைக்கப்பட்டுள்ளது. இதனால் அலெக்ஸ் பால் மேனனை விடுவிப்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. 

மாவோயிஸ்ட்டுகளின் இந்த புதிய நிபந்தனைகளையும் சேர்த்து பார்க்கும்போது மொத்தம் 17 தீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்று சத்தீஷ்கர் மாநில நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல் ராம்நிவாஸ் கூறியுள்ளார். பாதுகாப்பு படையினரை தங்கள் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும், பசுமை வேட்டை என்ற பெயரில் பாதுகாப்பு படையினரால் நடத்தப்படும் தேடுதல் வேட்டையை நிறுத்த வேண்டும் என்றும் மாவோயிஸ்ட்டுகள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று ராம்நிவாஸ் தெரிவித்தார். பழங்குடியின மக்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து பொய் வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும். இதேபோல நக்ஸல் ஆதரவாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும் என்றும் மாவோயிஸ்ட்டுகள் தங்கள் கோரிக்கையை அடுக்கிக்கொண்டே போகின்றனர் என்று அந்த போலீஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார். 

சத்தீஷ்கர் அரசு சார்பில் முன்னாள் தலைமை செயலாளர் நிர்மலா புச் தூதுவராக பங்கேற்றார். மாவோயிஸ்ட்டுகள் தரப்பில் பி.டி.சர்மா, பேராசிரியர் ஜி.ஹர்கோபால் ஆகியோர் பங்கேற்றனர். டட்மெல்டா என்ற அடர்ந்த வனப்பகுதியில் தற்போது அலெக்ஸ்பால் மேனன் மாவோயிஸ்ட்டுகளால் சிறை வைக்கப்பட்டுள்ளார். மாவோயிஸ்ட்டுகளின் புதிய கோரிக்கையால் மாவட்ட கலெக்டரை மீட்பதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

மாவோயிஸ்ட்டுகள் விடுதலை செய்யக்கோரும் 17 தீவிரவாதிகளில் பெரும்பாலானவர்கள் நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்டவர்கள். இவர்களை விடுதலை செய்வதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் உள்ளன. இருந்தாலும் இந்த கோரிக்கையை தங்களது அரசு பரிசீலனை செய்யும் என்று முதல்வர் ராமன்சிங் கூறியுள்ளார். 

நேற்றுமுன்தினம் இருதரப்பு தூதர்கள் நடத்திய சமரச பேச்சுவார்த்தைக்கு பிறகு மாநில அமைச்சரவையின் துணைக்குழு கூட்டத்தை கூட்டி அலெக்ஸ்பால் மேனன் விவகாரம் குறித்து ராமன்சிங் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது மாவட்ட கலெக்டரை மனிதாபிமான அடிப்படையில் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்ட்டுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கையை மாவோயிஸ்ட்டுகள் நிராகரித்துவிட்டனர். இப்போது மேலும் பல புதிய நிபந்தனைகளையும் அவர்கள் விதித்துவருகின்றனர். இதனால் மாவட்ட கலெக்டரை மீட்பதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்