முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனிமேஷனில் டோனியின் முகம்?

புதன்கிழமை, 8 மே 2024      விளையாட்டு
Dhoni 2023 04 29

Source: provided

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்தான் பாகுபலி. இதன் 2 பாகங்கள் வெளியாகி இந்திய அளவில் கவனம் பெற்றது. 

இந்நிலையில் பாகுபலி அனிமேஷன் தொடராக வெளியாகவிருக்கிறது. இதில் பாகுபலி கதாபாத்திரம் பிரபாஸின் முகம் சிஎஸ்கே அணியின் வீரர் முன்னாள் இந்திய கேப்டனுமான டோனியைப் போலவே இருக்கிறது என்ற விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து டோனியை பிடித்ததால் இப்படி உருவாக்கினீர்களா என்ற கேள்வி ராஜமௌலியிடம் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. அதற்கு ராஜமௌலி, “என்னைப் போலவே இந்தக் கதாபாத்திரத்தை அனிமேஷனில் உருவாக்கியவரும் டோனி ரசிகராக இருந்திருப்பார்” எனக் கூறியுள்ளார்.

__________________________________________________

இன்று டிக்கெட் விற்பனை 

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 12ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் இன்று விற்பனை செய்யப்படுகிறது. 

அதன்படி, காலை 10.40 மணிக்கு பேடிஎம் மற்றும் www.insider.in தளத்தில் நடைபெறும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.டிக்கெட் விலை குறைந்தபட்சம் ரூ.1700 முதல் அதிகபட்சம் ரூ.6000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை முழுவதும் ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

__________________________________________________

சஞ்சு சாம்சனுக்கு பாராட்டு

இந்த ஐபிஎல் தொடரில் சாம்சன் 11 போட்டிகளில் 471 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் வரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கிறார். சராசரி 67.29. ஸ்டிரைக் ரேட் 163.54 ஆகும். டி20 உலகக் கோப்பை அணியிலும் சாம்சன் தேர்வாகியுள்ளார். “46 பந்துகளில் 86 ரன்கள் என சஞ்சு சாம்சன் தனது கனவு இன்னிங்ஸை விளையாடி வருகிறார். இந்தத் தொடர் முழுவதுமே சுழல் பந்துகள், வேகப் பந்துகளை தனது உடல் பலத்தினால் அருமையாக விளையாடுகிறார்.

சாம்சன் ஃபிட்ன்ஸில் நல்ல உடல் பலத்தைப் பெற்றுள்ளார். டி20 கிரிக்கெட்டில் உடல் பலம் மிகவும் முக்கியம். அணிக்காக தனது முழு அர்ப்பணிப்பினை தருகிறார். அவருக்கு தேவையானது அதிர்ஷடம் மட்டுமே” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் புகழ்ந்து பேசியுள்ளார். வருண் ஆரோன், “சாம்சன் ஆஃப் சைட் வீசப்படும் மெதுவான பந்துகளை எளிதாக சிக்ஸர் அடிக்கிறார். தனது காலை நகர்த்தாமல் அடிக்கிறார். அதிசயமாக கலீல் அஹமது வீசிய பவுன்சரில் ஆட்டமிழந்தார். அதைத் தவிர்த்து அற்புதமாக ஆடி வருகிறார்” எனப் புகழாரம் சூட்டினார்.

__________________________________________________

சூர்யகுமாருக்கு லாரா ஆதரவு

டி-20 உலகக்கோப்பை தொடர் தொடங்க இன்னும் சுமார் 20 நாட்களே உள்ள நிலையில் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரையிறுதிக்கு முன்னேறும் அணிகள், அணிகளின் ஆடும் லெவனில் இடம் பெறக்கூடிய வீரர்கள் குறித்து தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் பிரையன் லாரா இந்திய அணியின் 3வது வரிசையில் விராட் கோலிக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் களமிறங்குவது இந்தியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நீங்கள் விரும்புவீர்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் என்னுடைய ஒரு ஆலோசனை என்னவெனில் சூர்யகுமார் 3-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். அவர் டி20 கிரிக்கெட்டில் மகத்தான வீரர்களில் ஒருவர். விவ் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்களிடம் பேசும் போது அவர் முன்கூட்டியே களத்தில் விளையாடுவதை விரும்புவதாக சொல்வார். 

சூர்யகுமார் விஷயத்திலும் நானும் அதையே உணர்கிறேன். அவரை முடிந்தளவுக்கு முன்கூட்டியே களமிறக்க முயற்சிக்க வேண்டும். அவர் துவக்க வீரர் கிடையாது. எனவே முன்கூட்டியே களமிறங்கி 10 - 15 ஓவர்கள் வரை அவர் பேட்டிங் செய்தால் போட்டி எப்படி மாறும் என்பது உங்களுக்கு தெரியும். நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் அல்லது சேசிங் செய்தாலும் கொஞ்சம் முன்கூட்டியே களமிறங்கினால் அவர் உங்களை அசைக்க முடியாத நிலைக்கு எடுத்துச் செல்வார். அது மற்றவர்கள் தங்களுடைய இடத்தில் சிறப்பாக விளையாடுவதற்கான வாய்ப்பை கொடுக்கும். எனவே அவரை 3வது இடத்தில் விளையாட வைப்பதற்கான வழியை கண்டறியுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

__________________________________________________

சாம்சன் குறித்து சங்ககாரா 

ராஜஸ்தான் - டெல்லி மோதிய போட்டியில் பலவிதமான ஸ்மார்ட் சிஸ்டம் கொண்ட ஐபிஎல் போட்டியில் அவசர கதியில் விக்கெட் கொடுத்தது குறித்து கிரிக்கெட் ரசிகர்கள் விமர்சகர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளரும் இலங்கை முன்னாள் வீரருமான குமார் சங்ககாரா கூறியதாவது: இது கோணம், ரீப்ளேவை பொறுத்தது. அவரது கால் எல்லைக் கோட்டினை தொட்டது போல் தெரிந்தது. 3ஆவது நடுவருக்கு இது சற்று கடினமான ஒன்று. போட்டியின் முக்கியமான நேரத்தில் இப்படி நடப்பது எல்லோருக்கும் வித்தியாசமான பார்வைகளைத் தரும். கடைசியில் நாம் 3ஆவது நடுவரின் தீர்பை ஏற்க வேண்டும்.

எங்களுக்கு வேறு கருத்துகள் இருந்தால் நடுவர்களிடம் முறையிட்டு தீர்த்துகொள்வோம். அந்த விக்கெட்டினை பொருட்படுத்தாமலும் நாங்கள் போட்டியில் வென்றிருக்க வேண்டும். தில்லி அணியினர் இறுதியில் நன்றாக பந்து வீசினார்கள் என்றார். இந்த சம்பவத்தினால் நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் இருந்து 30 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________

வங்காளதேச அணி அறிவிப்பு

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் 3 ஆட்டங்களிலும் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரில் 3-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 4வது டி20 போட்டி வரும் 10ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான கடைசி இரு டி20 போட்டிகளுக்கான வங்காளதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த அணியில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 3 போட்டிகளுக்கான வங்காளதேச அணியில் இடம் பெறாத சீனியர் வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். வங்காளதேச அணி விவரம்; நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), லிட்டன் குமார் தாஸ், தன்சித் ஹசன் தமீம், ஷகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, ஜேக்கர் அலி அனிக், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், தன்சிம் ஹசன் சகிப், சவுமியா சர்கார், தன்வீர் இஸ்லாம், முகமது சைபுதீன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து