முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் பி.ஏ.சங்மா வேண்டுகோள்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2012      இந்தியா
Image Unavailable

 

கவுகாத்தி, ஜுலை - 2 - ஜனாதிபதி தேர்தலில் மனசாட்சிப்படி ஓட்டுப்போடுங்கள் என்று எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஜனாதிபதி வேட்பாளர் பி.ஏ.சங்மா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற 24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதி தேர்தல் வருகிற 19 ம் தேதி நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக முன்னாள் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, பிஜு ஜனதாதளம் மற்றும் பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ.சங்மாவும் நேருக்கு நேர்  களம் காண்கிறார்கள். பிரணாப் முகர்ஜிக்கு வாய்ப்புக்கள் அதிகம் இருந்தாலும் தான் நிச்சயம் வெற்றிபெறுவேன் என்று சங்மா உறுதியாக தெரிவித்துள்ளார். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் செய்தியாளர்களை சந்தித்த பி.ஏ.சங்மா, ஜனாதிபதி தேர்தல் கட்சி சார்பாக நடத்தப்படும் தேர்தல் அல்ல, வேட்பாளர்களுக்கு சின்னங்கள் எதுவும் ஒதுக்கப்படாது. எம்.பி.க்களுக்கோ, எம்.எல்.ஏ.க்களுக்கோ கட்சிகளின் கொறடாக்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அரசியல் சட்ட விதிமுறைகளின்படி மிகவும் ரகசியமாக இந்த வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. எனவே எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நானும், பிரணாப்பும் எந்த கட்சிகளையும் சாராதவர்களாக உள்ளோம். ஏனெனில் நாங்கள் இருவருமே அவரவர்  சார்ந்த கட்சிகளில் இருந்து ராஜினாமா செய்துவிட்டோம். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும் என்னை முன்மொழிந்துள்ளனர். மேலும் தேசிய முற்போக்கு ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜனதா தளம், சிவசேனா போன்ற சில கட்சிகளைத் தவிர மற்ற எல்லாக் கட்சிகளும் எனக்கு ஆதரவளித்துள்ளன. கட்சி வேறுபாடின்றி அனைத்து கட்சிகளைச் சேர்ந்தவர்களும் எனக்கு ஆதரவளிக்க முன்வர வேண்டும். இந்த தேர்தலில் வெற்றி பெறத் தேவையான ஓட்டுக்கள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் இதுவரை 9 முறை பாராளுமன்றத்திற்கும், இரண்டு முறை சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். நான் போட்டியிட்ட எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளேன். அதேபோல் இந்த ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றிபெறுவேன். ஜனாதிபதி தேர்தலின் முடிவு வந்தபிறகுதான் எனக்கு கிடைத்துள்ள ஆதரவு குறித்து அனைவரும் ஆச்சரியப்பட இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்களில் எனக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ள கட்சிகளுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியின் ஆதரவை கோரியிருக்கிறேன். அவர் தமது கட்சி நிர்வாகக் குழுவைக் கூட்டி இதுகுறித்து விரைந்து முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அசாமில் ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள போடோ லேண்ட் மக்கள் முன்னணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் என்னை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வரும் எனக்கு அதிசயங்கள் அற்புதங்கள் மீது நம்பிக்கையுண்டு. அதே நேரத்தில் அந்த நம்பிக்கை மட்டும் வெற்றியை தந்துவிடாது கடுமையான உழைப்பும் வேண்டும் என்பதால் இந்த தேர்தலில் கடுமையாக பாடுபட்டு வருகிறேன். எனென்றால் நான் ஒரு கடுமையான உழைப்பாளி என்றும் சங்மா தெரிவித்தார். அசாம் பழங்குடி இனத்தைச் சேர்ந்த சங்மா, மத்திய அமைச்சராகவும், பாராளுமன்ற சபாநாயகராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்