உலகக் கோப்பை கிரிக்கெட் - பிரதமருக்கு பால்தாக்கரே கேள்வி

சனிக்கிழமை, 2 ஏப்ரல் 2011      இந்தியா
Bal-Thackeray 0

 

மும்பை,ஏப்.2 - இலங்கை விஷயத்தில் கிரிக்கெட் சாதுரியத்தை பிரதமர் மன்மோகன் சிங் ஏன் கையாளவில்லை என்று சிவசேனா கட்சி தலைவர் பால்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். 

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகாலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண கிரிக்கெட் விளையாட்டை ஒரு சாதுரியமாக பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்தினார். அதாவது மொகாலியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை பார்க்க வருமாறு பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி மற்றும் பிரதமர் கிலானி ஆகியோர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை கிலானி மட்டும் ஏற்று மொகாலி வந்து விளையாட்டை பார்த்தார். விளையாட்டு நடைபெற்ற இரவில் கிலானிக்கு பிரதமர் விருந்து கொடுத்தார். இந்த விளையாட்டை பயன்படுத்தி இருநாடுகளிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இந்தநிலையில் மும்பையில் இன்று உலக கோப்பைக்கான கிரிக்கெட் இறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வருமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மன்மோகன் சிங் அழைப்பு விடவில்லை. ஆனால் இந்த போட்டியை பார்க்க அழைப்பு இல்லாமலேயே ராஜபக்சே இன்று மும்பை வந்துள்ளார். ராஜபக்சேவுக்கு அழைப்பு விடாததற்கு மன்மோகன் சிங்கிற்கு பால்தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் உள்ள பிரச்சினையை தீர்க்க கிரிக்கெட் சாதுர்யத்தை பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்தியுள்ளார். அதேசமயத்தில் இலங்கையில் தமிழர்கள் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்த கிரிக்கெட் சாதுர்யத்தை மன்மோகன் சிங் பயன்படுத்தியிருக்கலாமே என்று பால் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: