தூத்துக்குடி தூய பனிமயமாதா பேராலயத் திருவிழா

வெள்ளிக்கிழமை, 27 ஜூலை 2012      தமிழகம்
Image Unavailable

 

தூத்துக்குடி, ஜூலை.27 - ஆன்மிக சிறப்புவாய்ந்த தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.தூத்துக்குடி மாநகரில் கடற்கரையோரம் அமைந்துள்ள 457 ஆண்டுகள் பழமைவாய்ந்த தூய பனிமய மாதா கேட்டவர்களுக்கு கேட்டவரம் தருவதால் ஆன்மிக சிறப்பு வாய்ந்த தலமாக விளங்குகிறது. உலகம் முழுவதும் சிறப்புபெற்றுள்ள தூய பனிமய மாதா ஆலயம் கடந்த 1982ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் நாள் பசிலிக்கா பேராலயம் என்ற சிறப்பு நிலைக்கு உயர்ந்தது.

சிறப்புமிக்க தூய பனிமய மாதா பேராலயத்திருவிழா ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பங்கு மக்களால் வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி இந்தாண்டிற்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக நேற்றுமுன்தினம் மாலை திருச்சிலுவை சிற்றாலயத்தில் இருந்து காணிக்கை மற்றும் கொடிபட்ட பேரணி பங்குதந்தை வில்லியம்சந்தானம் தலைமையில் நடந்தது. இதில் எளியோருக்கும், திருவழிபாடு, பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் பங்குமக்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டு ஆலயத்திற்கு பேரணியாக எடுத்துச்செல்லப்பட்டது.

தொடர்ந்து நேற்று காலை 6மணிக்கு திருப்பலியும், 7.30 மணிக்கு கூட்டுத்திருப்பலியும் அதனைத்தொடர்ந்து கொடியேற்றமும் நடந்தது. கொடியேற்ற விழாவிற்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமை வகித்து கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் அமைச்சர் சி.த.செல்லபாண்டியன், மேயர் சசிகலாபுஷ்பா, ஆலய பங்குதந்தை வில்லியம் சந்தானம் மற்றும் பல்வேறு ஆலயங்களை சேர்ந்த பங்குதந்தையர்கள், முக்கியபிரமுகர்கள், பொதுமக்கள், பங்குமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 

பின்னர் மதியம் பேராயர் ஆன்ட்ரூ டிரோஸ் அடிகளார் அன்னைக்கு பொன்மகுடம் அணிவித்தார். மாலை 5.30 மணிக்கு இளையோருக்கான திருப்பலி நடந்தது. திருவிழாவை தொடர்ந்து நாள்தோறும் பங்குஇறை மக்களுக்கான திருப்பலியும், இரவு செபமாலை, நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 

விழாவில் ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருப்பவனி நடக்கிறது. மறுநாள் 5ம் தேதி காலை 7.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன்அம்புரோஸ் தலைமையில் பெருவிழா கூட்டுத்திருப்பலியும், மதியம் 12மணிக்கு திருச்சி மறைமாவட்ட ஆயர் அந்தோணி டிவோட்டா தலைமையில் சிறப்பு நன்றி திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு பேராயர் பீட்டர் பர்ணான்டோ தலைமையில் ஆடம்பரத் திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 7மணிக்கு நகர வீதிகளில் அன்னையின் திருவுருவப்பவனி நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை தூய பனிமய மாதா பேராலய பங்குத்தந்தை வில்லியம்சந்தானம், துணை பங்குத்தந்தை கிளைட்டன், களப்பணியாளர் பிளேவியன், பங்குபேரவையினர் மற்றும் பங்குஇறைமக்கள் செயது வருகின்றனர். திருவிழாவை முன்னிட்டு எஸ்.பி.,ராஜேந்திரன் உத்தரவின்பேரில் ஏ.எஸ்.பி., மகேஸ் தலைமையில் போலீசார் 24மணிநேரமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: