முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீரை கடல்நீரில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும் ஜெயலலிதா உறுதி

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருப்பூர், ஏப்.- 8 - திருப்பூர் சாயப்பட்டறை கழிவுநீரை கடல்நீரில் கலக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூரில் ஜெயலலிதா உறுதி. நேற்று திருப்பூரில் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். திருப்பூர் வடக்கு தொகுதி வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், அவினாசி வேட்பாளர் கருப்பசாமி, பல்லடம் வேட்பாளர் பல்லடம் பரமசிவம், திருப்பூர் வடக்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர் தங்கவேல் ஆகியோர்களை ஆதரித்து அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது.

கொடுங்கோல் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட, சுதந்திரம் பெற இந்தத் தேர்தல் பொன்னான வாய்ப்பு, தமிழகத்தின்  வளர்ச்சியை பின்னுக்குத்தள்ளி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கருணாநிதி நடைபெற்ற எந்த ஒரு சம்பவத்திற்கும் நடவடிக்கை எடுத்ததில்லை. 

தா.கிருஷ்ணன் கொலைவழக்கு, பனையூர் இரட்டைக் கொலை வழக்கு, அமைச்சர் பரிதி இளம்வழுதி தாக்கிய சம்பவம் குறித்து இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேச கருணாநிதிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்பு ஆகிய சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மின்மிகை மாநிலமான தமிழ்நாடு மின்வெட்டு மாநிலமாக மாறியதுதான் கருணாநிதியின் சாதனை. மின் உற்பத்திக்கு எந்த ஒரு திட்டத்தையும் கருணாநிதி அரசு மேற்கொள்ளவில்லை.

வேலையில்லாத் திண்டாட்டம், எல்லாத் துறைகளிலும் லஞ்சம், எங்கும் ஊழல், எதிலும் ஊழல் செய்யும் இந்த ஆட்சி எப்போது போகும் என்று ஏங்கும் அளவிற்கு தமிழகத்தைச் சீரழித்துவிட்டார். தன் குடும்பம் வளம் பெறவேண்டும், வேறு யாரும் தொழில் செய்யக் கூடாது என்று திரைப்படத் துறையை குடும்பத்துறையாக்கிவிட்டார். கிரானைட்,மணல் கொள்ளை, கேபிள் டி.வி. என கருணாநிதி குடும்பமே கொள்ளையடிக்கிறது.

இதில் 6வது முறையாக முதல்வராக வேண்டும் என்று கருணாநிதி உங்களை நாடிவருகிறார். ஏமாந்துவிடாதீர்கள். தமிழினப பாதுகாவலர் என்று கூறும் கருணாநிதி தமிழர்களை அழித்தபோது, இலங்கையில் போர் நிறுத்தம் கோரி 3 மணி நேரம் உண்ணாவிரதம் நாடகம் நடத்தினார். ஒரே நாளில் இலங்கையில் தமிழர்களை கொன்றதை வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி. அ.தி.மு.க மத்திய அரசில் இருந்திருந்தால் வாபஸ் பெற்றிருக்கும். தமிழினத்தை அழித்த கருணாநிதி 6வது முறையாக முதல்வராக வரவேண்டும் என்று கேட்கிறார். வாக்காளர்கள் சிந்தித்து செயல்படுங்கள்.

செம்மொழி மாநாடு நடத்தி தன் குடும்ப உறுப்பினர்களை முன்வரிசையில் அமரவைத்து கெளரவப்படுத்தினார். தமிழ் அறிஞர்கள் அவர்களுக்குப் பின் வரிசையில் நின்று கொண்டிருந்தனர். கருணாநிதி குடும்ப உறுப்பினர்களை கெளரவிப்பதற்கும், கனிமொழிக்கு முன்னுரிமை கொடுக்கவுமே செம்மொழி மாநாடு நடத்தினார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த கனிமொழி, ராஜாத்தி, தயாநிதி ஆகியோர் பலனடைந்தனர். தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ராசா சிறையில் இருக்கிறார். சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த பலிகடா ஆக்கப்பட்டுள்ளார்.

இதையெல்லாம் செய்து விட்டு கருணாநிதி வாக்குக் கேட்டு வருகிறார். தமிழக மக்களை விரட்ட நினைக்கும் கருணாநிதியை குடும்பத்துடன் விரட்டி அடியுங்கள். நீங்கள் அதற்கு இந்த தேர்தலை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துங்கள். 

திருப்பூரில் விவசாய நிலங்கள் மாசுபடாத வண்ணம் சாயக்கழிவு நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர். ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களிலுள்ள சாயக்கழிவு நீரை கடல்நீருக்குக் கொண்டு செல்லும் திட்டம் உடனடியாக நிறைவேற்றப்படும். 100 நாள் வேலை திட்டத்தில் உள்ள குளறுபடிகள் நீக்கப்படும். திருப்பூரில் தொழிற்சாலைகளிலிருந்து ஏற்றுமதிக்கு மத்திய அரசு விதிக்கும் 10 சதவீத கலால் வரியை ரத்து செய்ய வலியுறுத்துவேன். திருப்பூர் மாவட்டத்தில் அடிப்படை வசதிகளை செய்து வளர்ச்சியடைந்த மாவட்டமாக உருவாக நடவடிக்கை எடுப்பேன்.

அனைவருக்கும்20 கிலோ தரமான இலவச அரிசி கிடைத்திட, தாய்மார்களுக்கு இலவச பேன், மிக்சி,கிரைண்டர் இலவசமாக வழங்கிட, பிளஸ்1, பிளஸ்2 பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் வழங்கிட, அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியரும் இலவச லேப்டாப் பெற்றிட, 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக 1000 முதல் 5000 ரூபாய் வரை வழங்கிட, வீடில்லா ஏழை குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலம் அளித்திட, வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் 3 லட்சம் மக்களுக்கு 1,80,000 ரூபாய் செலவில் 300 சதுர அடியில் இலவசமாக நவீன பசுமை வீடுகள் கட்டித் தந்திட, முதியோர், ஊனமுற்றோர், ஆதரவற்றோருக்கான உதவித்தொகையை 500 ரூபாயிலிருந்து 1000 ரூபாயாக உயர்த்திட, கேபிள் தொழிலை அரசுடமையாக்கி அனைத்து மக்களுக்கும் அரசு கேபிள் டி.வி இணைப்பு குறைந்த கட்டணத்தில் கிடைத்திட, 60000 பால் கறவை மாடுகளை இலவசமாக 6000 கிராமங்களுக்கு அளித்திட, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் 4ஆடுகள் இலவசமாக வழங்கிட, கரும்புக்கான கொள்முதல்விலையை 2500 ரூபாயாக உயர்த்திட, விவசாயிகளுக்கு இலவசமாக சொட்டு நீர் பாசன வசதி செய்து தந்திட, விவசாயிகளுக்கு தரமான விதைகள் மற்றும் இடுபொருட்கள் தள்ளுபடி விலையில்  கிடைத்திட, சுய உதவிக் குழுக்களுக்கு 10 லட்சம் அளவிற்கு வழங்கும் கடனில் 25 விழுக்காடு மானியம் அளித்திட, 25 ஆயிரம் ரூபாய் திருமண உதவித் தொகையுடன் மணப்பெண்ணிற்கு திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கிட, 58 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் உள்ளூர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு அரசு பேருந்துகளில் பயணம் செய்ய இலவச பஸ் பாஸ் வழங்கிட, தடையில்லா மின்சாரம் பெற்றிட, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரியஒளி மூலம் தடையில்லா  மின்சார வசதி இலவசமாக வழங்கிட, தமிழகம் எங்கும் உள்ள குடிநீர் பிரச்சனைகள் தீர, அண்டை மாநிலங்களுடனான  நதிநீர்ப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண, கட்டுக்கடங்காமல் ஏறியுள்ள விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர, குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை மேம்படுத்த, சாலை இல்லாத ஊர்கள் சாலை வசதி பெற்றிட, போக்குவரத்து வசதிகளை மேம்படுத்திட, கடந்த 5 ஆண்டுகால மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் கடுமையாக பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், நெசவாளர்கள் மற்றும் மீனவர்கள் ஆகிய உழைக்கும் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பாதுகாப்பினையும் உறுதி செய்திட, தொழில் வளம் பெருக, தொழில் அமைதியை உறுதி செய்திட, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட, சத்துணவு ஊழியர்களின்  கோரிக்கைகளை நிறைவேற்ற, பாதாள சாக்கடைத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிட, கருவறை முதல் கல்லறை வரை பயனளிக்கக்கூடிய உழவர் பாதுகாப்புத்திட்டத்தினை புதுப்பொலிவுடன் மீண்டும் செயல்படுத்திட, நடைமுறையில் உள்ள மக்களுக்குப் பயன் அளிக்கும் திட்டங்களைத்தொடர்ந்து செயல்படுத்திட,  ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ள தமிழ்நாட்டில் மக்களை மீட்டிட, கருணாநிதி குடும்பத்தினர் உட்பட தி.மு.கவினரால் ஏழை எளிய மக்களிடமிருந்து மிரட்டிவாங்கப்பட்ட சொத்துக்களை மீட்டு உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்திட, ஒரு ரவுடிக் கும்பல் தமிழக மக்களை அடக்கி ஆள்வதற்கு முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியை ஆதரிக்கவேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்