முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர்கள் உச்சக்கட்ட ஓட்டுவேட்டை தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிகிறது

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.- 11 - தமிழக சட்டசபைக்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இதையொட்டி தலைவர்கள் அனைவரும் உச்சக்கட்ட ஓட்டுவேட்டையில் ஈடுபட்டுள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.  தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் பல்வேறு தேதிகளில் பல கட்டங்களாக நடைபெறவுள்ளன. இவற்றில் தமிழகம், புதுச்சேரிக்கு வரும் 13 ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைக்கும் பணியை ஒருவழியாக முடித்தன. 

பின்னர் கடந்த 24 ம் தேதியன்று அனைத்து கட்சி வேட்பாளர்களும் மனுத்தாக்கல் செய்தனர். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தான் போட்டியிடும் ஸ்ரீரங்கம் தொகுதியிலும், முதல்வர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியிலும், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், ரிஷிவந்தியம் தொகுதியிலும் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதன் பிறகு தலைவர்களின் பிரச்சாரம் தொடங்கியது. 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, மனுத்தாக்கல் செய்த கையோடு தனது பிரச்சாரத்தை தொடங்கினார். திருச்சியில் தொடங்கிய அவரது பிரச்சாரம் இன்று சென்னை நகரில் முடிவடைகிறது. அதே போல் தி.மு.க. தலைவர் கருணாநிதியும், திருவாரூரில் பிரச்சாரம் தொடங்கி பல ஊர்களில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தமிழகத்தின் பல பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க, தி.மு.க. இரண்டு அணிகளிலுமே பல நடிகர், நடிகைகள் பிரச்சாரம்  செய்து வருகிறார்கள். அ.தி.மு.க அணிக்காக நடிகர் சரத்குமார், நடிகர் செந்தில், ஆனந்தராஜ், வடிவேலுவின் எதிரி சிங்கமுத்து, ராதாரவி,  நடிகை சி.ஆர். சரஸ்வதி ஆகியோரும், தி.மு.க. அணியில் காமெடி நடிகர் வடிவேலு, நடிகை குஷ்பு ஆகியோரும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். 

அகில இந்திய அளவிலான தலைவர்களும், தமிழகம் வந்து பிரச்சாரம் செய்தனர். பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் கோவையில் பிரச்சாரம் செய்தார். உ.பி. முதல்வர் மாயாவதி மதுரையில் பிரச்சாரம் செய்தார். இதே போல் கம்யூனிஸ்டு தலைவர்கள் அனைவரும் தமிழகம் வந்து பிரச்சாரம் செய்து விட்டுபோனார்கள். பா.ஜ.க. தலைவர் அத்வானி நேற்று திண்டுக்கல், கோவையில் பிரச்சாரம் செய்தார். இப்படியாக தலைவர்கள் அனைவரும் உச்சக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா இறுதிக்கட்டமாக சென்னையில் நேற்று பிரச்சாரம் செய்தார். இன்றும் அவரது பிரச்சாரம் சென்னையில் தொடர்கிறது. முதல்வர் கருணாநிதி நேற்று திருவாரூரிலும், விஜயகாந்த் ரிஷிவந்தியத்திலும் பிரச்சாரம் செய்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் இவர்கள் உச்சக்கட்ட ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். இந்த அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவுக்கு வருகிறது. அதன் பிறகு யாரும் பிரச்சாரம் செய்யக் கூடாது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் 13 ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. தேர்தல் முடிவை தெரிந்து கொள்ள நாம் ஒரு மாதம் காத்திருக்க வேண்டும். முன்பெல்லாம் மூன்றே நாட்களுக்கு பிறகு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஆனால் இப்போது ஒரு மாதம் கழித்து ஓட்டுக்கள் எண்ணப்படவுள்ளன. அதுவரை தமிழக மக்கள் காத்திருக்கத்தான் வேண்டும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்