முக்கிய செய்திகள்

போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தா.பாண்டியன் புகார்

புதன்கிழமை, 13 ஏப்ரல் 2011      தமிழகம்
Pandiyan 4

 

சென்னை, ஏப்.13 - தளி தொகுதி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை கொலை செய்ய முயற்சித்த தி.மு.க.வினருக்கு உடந்தையாக செயல்படும் காவல்துறை, மின்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மாநில தேர்தல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு :​

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை

தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றது. காவல்துறை அதிகாரிகளில் பலர் ஆளும் கட்சியான தி.மு.க பணபட்டுவாடா செய்வதற்கு உடந்தையாக இருந்து வருகின்றனர். தமிழகத்தின் பல பகுதிகளில் தி.மு.கவினர் கொலை வெறி தாக்குதல் நடத்திவருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ந.நஞ்சப்பனுக்கு தேர்தல் பணியாற்றிய தே.மு.தி.க.வின் இளம் தொண்டர் அசோகன் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

10.04.2011​ம் தேதியன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் (தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்) டி.ராமச்சந்திரனை, தளி அருகிலிருக்கும் கொத்தனூர் கிராமம் இராம் நகரில் தி.மு.கவினர் பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். தளி அருகிலிருக்கும் மல்லசத்திரம் கிராமத்தில் எங்களது இயக்க தொண்டர் சீனிவாசனின்  இருசக்கர வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

தளியில் திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததை தடுத்த போது எங்கள் இயக்க தலைவர்கள் மாதேஸ், நாராயணன்  ஆகியோர் தாக்கப்பட்டனர். கிருஷ்ணன் தி.மு.கவினரால் கல்லெறிந்து தாக்கப்பட்டார்.

அகலக்கோட்டை ஊராட்சியில் பணபட்டுவாடாவை தடுக்க முயன்ற ஊராட்சி மன்ற தலைவர் மாதேவன் மற்றும் சென்னிவீரப்பா போன்றோர் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டனர்.

உரிகம் ஊராட்சியில் பணம் மதுபாட்டில்கள் வாக்காளர்களுக்கு வழங்கிய போது தடுத்த, ஊராட்சி மன்ற தலைவர் மாதேவய்யா தாக்கப்பட்டுள்ளார்.

இன்று (12.4.11) காலை தளி சாலையில் அன்யாலம் எனும் இடத்தில் தனி வீட்டில் குடியிருக்கும் எமது இயக்க தொண்டர் அஸ்வத் ரெட்டி தாக்கப்பட்டுள்ளார்.

இந்தப்பகுதிகளில் பணப்பட்டுவாடாவும் தாக்குதல் நிகழ்வுகளும் திமுகவினரால் காவல்துறையுடன் மின்வாரியத்துடன் இணைந்து நடத்தப்பட்டதாக தெரிகின்றது. பணப்பட்டுவாடா நடப்பதற்கு முன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா, வன்முறைத் தாக்குதல்கள் குறித்து காவல்துறைக்கு புகார் கொடுத்த 5, 6 மணி நேரம் கழித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் போன்றோர்களுக்கும் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையேயுள்ளது.

அரசின் அனைத்து நிர்வாகமும் திமுகவினருக்கு சாதகமாக செயல்படும் இந்நிலையை மாற்றிட உடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இடமாற்றம் செய்து சுதந்திரமாக அமைதியான தேர்தல் நடைபெற ஆவன செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: