தமிழ்நாடு கலாச்சார பெருமை - தொய்மையும் வாய்ந்த நாடு

ஞாயிற்றுக்கிழமை, 10 பெப்ரவரி 2013      அரசியல்
Image Unavailable

 

மதுரை, பிப்.10 - தமிழ்நாடு கலாச்சார பெருமையும்,தொய்மையும் வாய்ந்த நாடு என்று கவர்னர் ரோசய்யா தெரிவித்தார்.  மதுரையின் தொன்மையையும், பழம்பெருமையையும் அனைவருக்கும் எடுத்துக் கூறுகின்ற வகையில் மதுரை மக்களால் கொண்டாடப்பட்டு வரும் மாமதுரை போற்றுவோம் விழாவின் இரண்டாம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பங்கேற்று போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி விழாப்பேருரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் கே.ரோசைய்யா பேசும் பொழுது தெரிவித்ததாவது,

மதுரையின் வரலாற்று சிறப்புகளை நினைவு கூறுகின்ற வகையிலும், கலாச்சாரத்தை போற்றுகின்ற வகையிலும் இந்த மாமதுரை விழாவை நடத்துகின்ற விழாக்குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  இந்த விழாவில் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்குவதிலும், விழாப்பேருரையாற்றுவதிலும் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.  

இந்தியா மிகப்பெரிய கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும், நாகரீகத்திலும் பெருமை வாய்ந்த நாடாக 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து திகழ்ந்து வருகிறது. பல மொழிகள், பல மதங்கள், என்று பல்வேறுபட்ட மக்கள் வாழும் நாடு இந்தியா.  தமிழ்நாடு கலாச்சார பெருமையும், தொன்மையும் வாய்ந்த நாடு.  குறிப்பாக மதுரைக்கென்று தனிவரலாறு உள்ளது.  மதுரையில்தான் திறமைவாய்ந்த தமிழ்புலவர்களைக் கொண்டு பழமைவாய்ந்த மூன்று தமிழ்ச்சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறிய இடம் மதுரை.  

நமது கலாச்சாரத்தின் பெருமைகள் கோயில்களை பார்த்தாலே தெரியும்.  பழங்காலத்தில் கோயில் என்பது புலவர்கள், இசைஆர்வலர்கள், நாட்டியமாடுபவர்கள், தங்களின் திறமையை முதல் முதலில் வெளிப்படுத்தும் இடமாக இருந்தது.  கோயில்கள் நாகரீகத்தின் மையமாக திகழ்ந்தது.  கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் பெருமை வாய்ந்த கோயில் நகரமாக மதுரை திகழ்கிறது.  

அத்தகைய பெருமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க மதுரையின் தொன்மையை விளக்குகின்ற வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இதைப்போன்றே தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் விழாக்கள் கொண்டாடப்பட வேண்டும் என்றார்.  

      கலெக்டர் அன்சுல்மிஸ்ரா பேசும்போது,மதுரை மாவட்ட நிர்வாகம் மாமதுரை போற்றுவோம் விழாக்குழுவிற்கு முடிந்த வரையில் அனைத்து வகையிலும் இயன்ற உதவியை செய்திருக்கிறது.  இந்த மாமதுரை விழா இனிவரும் காலங்களிலும் ஆண்டு தோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை ்ர்க்கும் வண்ணம் மிகப்பெரிய விழாவாக அமைய வேண்டும்;.  இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்த மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும், விழாவை நடத்திக்கொண்டிருக்கும் விழாக்குழுவினருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

மாமதுரை போற்றுவோம் தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, வினாடிவினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மேதகு தமிழக ஆளுநர் அவர்கள் பரிசுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா  முன்னிலை உரையாற்றினார்.  விழாக்குழுத்தலைவர் கருமுத்து கண்ணன்  தலைமையுரையாற்றினார்.  

இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையாளர் முனைவர் ஆர்.நந்தகோபால் செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சி.செல்வராஜ், உதவி இயக்குநர் (தணிக்கை) ராஜசேகர், தேசிய தகவல் மைய அலுவலர் மைக்கேல் உள்ளிட்ட அலுவலர்கள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக விழாக்குழுவின் துணைத்தலைவர்கள் திரு.கே.எஸ்.பரத் வரவேற்புரையாற்றினார்.  முடிவில் சு.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

 

கண்கவர்  நடனம்- மேளத்துடன் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு

 

மதுரையில் கடந்த மூன்று நாட்களாக மதுரையை போற்றுவோம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார ஊர்தி அணிவகுப்பு நேற்று மாலை 5 மணியளவில் மதுரை கல்லூரி மைதானத்தில் இருந்து புறப்பட்டது. இதை கவர்னர் ரோசய்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.  கரகாட்ட கலைஞர்கள் முதலில் நடனம் ஆடியபடி வந்தனர். இதைதொடர்ந்து தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், குறவன்குறத்தி ஆட்டம், செண்டை மேளம், நையாண்டி மேளம், ராகமேளம் என இசைத்தபடி வந்தனர். பின்னர் கல்லூரி மாணவ, மாணவிகளின் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

   இதை தொடர்ந்து அலங்கார ஊர்திகள் அணிவகுத்து வந்தன. பெரியாறு அணை, அதை கட்டிய பென்னிகுவிக் உருவ சிலையுடன் கூடிய ஊர்தி பார்வையாளர்களை மிகவும் கவர்ந்தது. இதை போல் மதுரை சந்திப்பு என்ற தலைபில் வந்த அலங்கார ஊர்தியும் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்தது. இந்த ஊர்தி ஊர்வலத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த அலங்கார ஊர்தி ஊர்வலம் மற்றும் நடன நிகழ்ச்சிகளை ரோட்டின் இருபுறமும் நின்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: