கருணை மனு நிராகரிப்பு தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதன்கிழமை, 13 பெப்ரவரி 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, பிப்.14 - தூக்குதண்டனை  விதிக்கப்பட்ட ஒரு கைதியின் கருணைமனு  ஜனாதிபதியால்  நிராகரிக்கப்பட்டபின்,அதன் விவரத்தை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாமல் மரணைதண்டனையை நிரைவேற்றுவதற்கு தடை கோரி தாக்கல் செய்தவழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து 4 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறை கைதிகள் உரிமைகள் அமைப்பின் இயக்குனர் புகழேந்தி சென்னை ஐகோர்ட்டில் பொது நலன் கருதி ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், கருணை மனு தாக்கல் செய்த நிலையில் தூக்குதண்டனை  விதிக்கப்பட்ட 20 கைதிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்சல் குருவுக்கு நடந்தது போல் கருணை மனு நிராகரிக்கப்பட்டு அதை ரகசியமாக வைத்து தூக்குத் தண்டனையை நிறைவேற்றி விடுவார்களோ என்ற அச்சம் அவர்களிடம் எழுந்துள்ளது.

ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டதும் அதை பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் விட்டு விட்டால் அந்த கைதியால் சட்ட உதவிகளை பெற முடியாத நிலை ஏற்படும். இது கைதிகளின் உரிமையை மறுப்பதாகும். எனவே தூக்கு தண்டனை கைதி ஒருவரது கருணை மனு நிராகரிக்கப்பட்டால் அதை மக்களுக்கு அறிவிக்காமல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு தற்காலிக தலைமை நீதிபதி ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி கே.வெங்கட்ராமன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். இந்த மனு , விசாரணைக்கு உகந்ததா, இல்லையா என்பது குறித்து மத்திய அரசிடம் தகுந்த அறிவுரை பெற்று உரிய விளக்கத்தை இன்னும் 4 வாரத்தில் இந்த நீதிமன்றத்திற்கு பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: