ஊழலை ஒழித்துக்கட்ட சட்டம் மட்டும் போதாது: தொகாடியா சொல்கிறார்

சனிக்கிழமை, 23 ஏப்ரல் 2011      ஊழல்
praveen togadia

 

பார்மர்,ஏப்.- 23 - லோக்பால் மசோதா என்பது முக்கியமானதுதான். தேவைதான். ஆனால் ஊழலை ஒழித்துக் கட்ட இது போன்ற சட்டம் மட்டும் கொண்டு வந்தால் போதாது. இது போன்ற பயங்கரத்தை ஒழித்துக்கட்ட வேண்டுமானால் பாமர மக்களும் கொதித்தெழுந்து தீவிரமாக பணியாற்ற வேண்டும். அதுதான் இன்றைய தேவை என்று விஸ்வ இந்து பரிசத் இயக்கத்தின் மூத்த தலைவரான பிரவீண் தொகாடியா கருத்து தெரிவித்துள்ளார். 

விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் சர்வதேச பொதுச் செயலாளர் பிரவீண் தொகாடியா நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ஊழலை ஒழித்துக் கட்டுவதற்காக லோக்பால் மசோதாவை சட்டமாக்க மத்திய அரசு முயல்கிறது. இந்த லோக்பால் மசோதா தேவைதான். ஆனால் வெறும் சட்டம் மட்டும் உதவாது. 

ஊழலுக்கு எதிராக பொதுமக்களும் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் ஊழலை ஒழிக்க முடியும். இந்துத்துவாவுக்கு நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. காரணம், சர்வதேச எல்லைகளில் மதரசாக்கள் பெருகி வருகின்றன. இவ்வாறு பிரவீண் தொகாடியா கூறினார். ஊழலை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதற்காக சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே போராடியதும் அதை தொடர்ந்து மத்திய அரசு அதை ஏற்றுக் கொண்டு லோக்பால் மசோதா கொண்டு வருவதற்காக 10 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்திருப்பதும் தெரிந்ததே. இந்த மசோதா வரவிருக்கும் மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மன்மோகன்சிங் சூசகமாக தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: