நோவார்டிஸ் மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 2 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். 3 - புற்றுநோய் மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை கோரி, சுவிட்சர்லாந்து மருந்து நிறுவனம் நோவார்டிஸ் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நேற்று முன்தினம் தள்ளுபடி செய்தது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த மருந்து நிறுவனமான நோவார்டிஸ், ஜிலிவிக் என்ற பெயரில் புற்றுநோய் மருந்தைத் தயாரிக்கிறது. அதற்கு இந்தியாவில் காப்புரிமை கேட்டு சென்னையைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை வாரியத்திடம் விண்ணப்பித்தது. காப்புரிமை தரப்பட்டால், புற்றுநோய் மருந்துக்கான வேதிப் பண்புகள் கொண்ட பொது மருந்துகள் தயாரிப்பில் ்டுபடும் உள்நாட்டு நிறுவனங்கள் பாதிக்கப்படும் எனக் கூறி, காப்புரிமை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நோவார்டிஸ் தொடர்ந்த வழக்கில் காப்புரிமை அளிக்க உத்தரவிடுவதுடன், புற்றுநோய் மருந்துக்கு தேவையான வேதிப் பண்பு அடிப்படையிலான பொது மருந்துகளை இந்திய நிறுவனங்கள் தயாரிக்க தடை விதிக்கவும் கேட்கப்பட்டது. 

அந்த வழக்கில் நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. புற்றுநோய் மருந்துக்கு காப்புரிமை கோரும் நோவார்டிஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், உள்நாட்டில் வேதிப் பண்பு அடிப்படையில் பொது மருந்துகளை தயாரிக்க தடை விதிக்கவும் மறுத்து விட்டனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பின் மூலம் நோவார்ட்டிஸ் என்னும் மருந்து தயாரிக்கும் மாடிபியாவின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலகில் பல மருந்துகளை கண்டுபிடிக்கும் நிறுவனங்கள் அதனை அதிக விலை வைத்து விற்கின்றனர். அதனால் வளர்ந்து வரும் நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளுக்கு அரிய வகை நோயான புற்று நோய் மற்றும் லுகேமியா போன்ற நோய்கள் வந்தால் வசதி படைத்தவர்கள் மட்டுமே மருந்துகளை வாங்க இயலும். 

இதனை இந்திய மருந்து கட்டுபாட்டு கழகம் ஜெனரிக் டிரக் என்னும் முறையை கொண்டு வந்து அதே பார்முலாவில், ஆனால் உள்நாட்டிலேயே தயாரித்து அதை இந்தியாவில் விலை மலிவாக எல்லோரும் உபயோப்படுத்துவது போல கொண்டுவந்தனர். நோவார்ட்டிஸ் நிறுவனம் புற்று நோய்க்கான ஒரு காப்புரிமையை சுப்ரீம் கோர்ட் வரை போய் இழந்தது. இது 2007 ம் ஆண்டே சென்னை ஐகோர்ட்தான் இதனை முதலில் தள்ளுபடி செய்தது. பின்பு பல கட்டங்கள் போராடி உச்சநீதிமன்றம் போன நோவார்ட்டிஸ் இந்த காப்புரிமையை இழந்துள்ளது. 

இந்த நிறுவனத்தின் கடந்த வருட டர்ன் ஓவர் மட்டும் 5670 கோடி டாலர்கள் மற்றும் இதன் லாபம் மட்டும் 960 கோடி டாலர்கள் என்பது குறிப்பிட்டத்தக்கது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆப்தாப் ஆலம் தலைமையிலான பெஞ்ச் நேற்று முன்தினம் அளித்த தீர்ப்பின் மூலம் புற்றுநோய்க்கான ரூ. 1.2 லட்சம் மதிப்புள்ள மருந்து இந்தியாவில் ரூ. 8,000 க்கே மலிவாக கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இது போல காச நோய், லுக்குமியா, எய்ட்ஸ் மற்றும் இன்னும் பல உயிர் கொல்லி நோய்களின் மருந்து மலிவு விலையில் கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: