மற்றொரு பலாத்கார வழக்கிலும் இந்திய டிசைனருக்கு சிறை

புதன்கிழமை, 3 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

நியூயார்க், ஏப். 4 - அமெரிக்காவில் பாலியல் பலாத்கார வழக்கில் 59 ஆண்டு கால சிறைத் தண்டனையை அனுபவிக்கும் இந்திய பேஷன் டிசைனர் ஆனந்த் ஜோனுக்கு மற்றொரு பலாத்கார வழக்கில் 5 ஆண்டுகால சிறைத் தண்டனையை நியூயார்க் நீதிமன்றம் நேற்று முன்தினம் விதித்துள்ளது.

அமெரிக்க வாழ் இந்தியரான ஆனந்த் ஜோன், கேரளாவை சேர்ந்தவர். அமெரிக்காவில் கடந்த 1999 ம் ஆண்டு முதல் பேஷன் டிசைனர் தொழிலை தொடங்கினார். பிரபல நட்சத்திரங்களின் ஆடை வடிவமைப்பாளராக செயல்பட்டு பிரபலாமானவராக திகழ்ந்தார்.

ஆனந்த் ஜோன் மீது கடந்த 2007 ம் ஆண்டு பாலியல் புகார் கூறப்பட்டது. பேஷன் உலகில் மாடலாக வலம் வர வாய்ப்பு தருவதாக கூறி பல பெண்களை அவர் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனந்த் ஜோன் மீது புகார் கூறியோரில் 14 வயது சிறுமியும் அடக்கம். இது தொடர்பான வழக்கில் கலிபோர்னியா நீதிமன்றம் அவருக்கு 59 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தது. தற்போது அந்த சிறைத் தண்டனையை ஆனந்த் ஜோன் அனுபவித்து வருகிறார்.

மேலும் மான்ஹாட்டன், டெக்சாஸ், நியூயார்க் நகர நீதிமன்றங்களிலும் ஆனந்த் மீது பலாத்கார வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் மான்ஹாட்டன் நீதிமன்றம் ஆனந்த் ஜோனுக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்தது.

இந்நிலையில் நியூயார்க் நகர நீதிமன்றத்தில் ஆனந்த் ஜோன் மீதான ஒரு பலாத்கார வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்காக கலிபோர்னியாவில் இருந்து நியூயார்க் சிறைக்கு ஆனந்த் மாற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தார். அப்போது இந்தியாவில் இருந்தும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆனந்த் ஜோனின் உறவினர்களும் நண்பர்களும் நீதிமன்ற அறையில் குவிந்திருந்தனர். அவர்கள் அனைவரும் வெள்ளை டிசர்ட் அணிந்து அதில் ஆனந்த் ஜோனை விடுவிக்கக் கோரும் வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. நீதிமன்றத்துக்கு வெளியேயும் ஆனந்த் ஜோனை விடுவிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

நீதிமன்றத்தில் ஆனந்த் ஜோனிடம் இந்த வழக்கு தொடர்பாக ஏதேனும் கூற விரும்புகிறீர்களா என்று கேட்கப்பட்டதற்கு, எனக்காக இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று மட்டும் கூறினார். இறுதியாக நியூயார்க் நீதிமன்றம் ஆனந்த் ஜோனுக்கு பலாத்கார வழக்கில் 5 ஆண்டுகால சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்: