சென்னை, மே. 22 - கிரிக்கெட் சூதாட்டம் எப்படி வெளிச்சத்துக்கு வந்தது என்பது குறித்து மேலும் பல புதிய தகவல் கிடைத்துள்ளன.
சென்ற மாதம், பெங்களூரில் பாரதீய ஜனதா அலுவலகம் அருகே நடந்த குண்டு வெடிப்பில் குற்றவாளிகளான 10 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அப்போது நடத்திய அதிரடி சோதனையில் பெங்களூர் போலீசாரின் கையில் கிரிக்கெட் சூதாட்ட ஆவணம் ஒன்று கிடைத்தது. அதன் மூலமே ஐ.பி.எல். லில் கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
கைதான அந்த தீவிரவாதி சூதாட்ட கும்பல் ஒன்றிடம் பணம் கட்டி ஏமாந்து உள்ளதும் தெரிய வந்தது. உடனடியாக கியூ பிரிவு போலீசார் இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் தெரிவித்தனர். அதன் பேரிலேயே போலீசாரின் அதிரடி வேட்டையில் வீரர்களும், சூதாட்ட தரகர்களும் பிடிபட்டனர். கிரிக்கெட் சூதாட்ட தரகர்களின் தலைவனாக கருதப்படும் பிரசாந்த்துடன் ஸ்ரீசாந்த்க்கு தொடர்பு இருந்தது தெரிய வந்தது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ஸ்ரீசாந்த் சென்னை வரும் போதெல்லாம் பிரசாந்த்துடன் காரில் பல இடங்களில் சுற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவருக்கும் இடையேயான நட்பு பற்றி தற்போது போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.