திருச்சி திமுகவில் முன்னாள் அமைச்சர்கள் கோஷ்டி மோதல்

வெள்ளிக்கிழமை, 19 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி, ஜூலை. 20 - தமிழ்நாடு முழுவதும் திமுகவில் உட்கட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் போட்டிட விருப்பம் உள்ளவர்களுக்கு விண்ணப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிலையில் திருச்சி மாவட்ட திமுகவை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு ஒரு கோஷ்டியாகவும், மற்றொரு முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் இன்னொரு கோஷ்டியாகவும், செயல்பட்டு வருகிறார்கள். இதனால் திருச்சி மாவட்ட திமுகவில் இரு கோஷ்டிகளும் பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே வரும் 22ந்தேதியுடன் விண்ணப்பங்கள் வழங்கும் பணி முடிவடைய இருப்பதால் விண்ணப்பங்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இந்த நிலையில் திருச்சியை அடுத்த வயலூரில் மணிகண்டம் ஒன்றிய நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வந்தது. ஒரு திருமண மண்டபத்தில் கே.என்.நேரு கோஷ்டியினர் விண்ணப்பங்களை நேற்று காலை வழங்கினார்கள். மற்றொரு திருமண மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் கோஷ்டியினர் விண்ணப்பங்களை திமுகவினரிடம் வழங்கினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இருதிருமண மண்டபத்திலும் திமுகவினர் குவிந்திருந்தனர். ஒரு மண்டபத்திற்கு நேற்று காலை முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சென்று விண்ணப்பங்களை வழங்கி விட்டு மற்றொரு மண்டபத்திற்கு செல்ல ஆயத்தமானார். இதையடுத்து கே.என்.நேருவின் கார் மண்டபத்தில் இருந்து புறப்பட்டபோது ஒரு இருசக்கர வாகனம் மீது லேசாக உரசியது. அதில் வந்தவர் கே.என்.நேருவை பார்த்து ஆத்திரத்துடன் திட்டியதாக கூறப்படுகிறது. அதனால் நேருவின் அடியாள் ஒருவர் மொபட் ஓட்டிவந்தவர் மீது கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. அவரது சட்டையும் கிழிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் கே.என்.நேரு வந்த கார் மீது இன்னொரு கோஷ்டியை சேர்ந்த திமுகவினர் சரமாரியாக கற்களை வீசினார்கள். இதனால் நேருவின் கார் பலத்த சேதமடைந்தது. இதையடுத்து இரு கோஷ்டியினரும் மாரிமாரி தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பவத்தில் சில திமுகவினருக்கு காயம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அந்த பகுதி பெரும் கலவரப்பகுதியாக காட்சியளித்தது. பிறகு கே.என்.நேரு இன்னொரு மண்டபத்திற்கு சென்று விண்ணப்ப படிவங்களை கொடுத்து விட்டு சென்று விட்டார். 

கடந்த ஒருசில மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் ஸ்ரீரங்கம் நகரில் நடந்த திமுக நிகழ்ச்சிகளில் இரு கோஷ்டியினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டார்கள். இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திருச்சி ஜங்சன் காதிகிராப்ட் அருகில் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருச்சி மாவட்ட திமுக சார்பில் கே.என்.நேரு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மற்றொரு முன்னாள் அமைச்சர் என்.செல்வராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரும் கண்டன ஆர்ப்பாட்ட மேடையில் ஏறாமல் நேருவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓரமாக நின்று போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். ஆகமொத்தம் திருச்சி மாவட்ட திமுகவில் கோஷ்டி சல் நீருத்த நெருப்பாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: