மக்களவை தேர்தலுக்கு முன் கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு

ஞாயிற்றுக்கிழமை, 21 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை. 22 - மக்களவைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்புள்ளது என்று பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். இந்த ஆண்டு இறுதியில் சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப் பேரவை தேர்தலுடன் சேர்ந்து மக்களவை தேர்தலை நடத்துவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து ஐதராபாத்தில் வெங்கையா நாயுடு செய்தியாளர்களிடம் கூறுகையில், 

காங்கிரஸ் அரசின் செல்வாக்கு நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. எனவே முன்கூட்டியே தேர்தல் வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்த அரசை ஆட்சியில் இருந்து அகற்ற முன்னதாகவே சந்தர்ப்பம் அமையாதா என்று மக்கள் காத்திருக்கின்றனர். செலவை குறைக்கும் வகையில் மக்களவைக்கும் சில மாநிலங்களுக்கும் பேரவை தேர்தலையும் வரும் நவம்பர் மாதத்திலேயே நடத்துவது குறித்து மத்திய அரசுச வட்டாரத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்கூட்டியே தேர்தல் வந்தால் அதை சந்திக்க கட்சி அமைப்புகளை தயார்படுத்த வேண்டும். 

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பேரணி நடத்தப்படும். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு பிரச்சாரம் செய்யவுள்ளார். இப்பேரணிகளில் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ராஜ்நாத்சிங், முரளி மனோகர் ஜோஷி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். நாடு எதிர்நோக்கியுள்ள சவால்கள் குறித்தும் ஆட்சிக்கு வந்தால் பா.ஜ.க அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் நல்லாட்சி குறித்தும் மக்களிடையே பிரச்சாரம் செய்யப்படும். நாடு வளர்ச்சியடைந்து வரும் நிலையில் அதன் பலன்கள் மக்களுக்கு போய் சேரவில்லை. ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது காங்கிரஸ் தலைமையிலான அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளதாக பிரதமர் பெருமையாக கூறியுள்ளார். 

ஊழல், விலைவாசி உயர்வு, ருபாய் மதிப்பு வீழ்ச்சி, பொருளாதாரம், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம், பணவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளன. மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற காங்கிரஸ் அரசு தவறி விட்டது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: