முக்கிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் இறுதி கட்ட தேர்தல் முடிந்தது

செவ்வாய்க்கிழமை, 10 மே 2011      இந்தியா
WestBeng Elect

 

கொல்கத்தா, மே11 - மேற்கு வங்காளத்தில் நேற்று இறுதிக்கட்ட தேர்தல் பலத்த பாதுகாப்புடன் விறு விறுப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, அசாம், புதுச்சேரி மற்றும் மேற்கு வங்க மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதன்படி அசாமில் இரண்டு கட்டங்களாகவும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதையடுத்து அங்கு ஏற்கனவே 5 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துவிட்டன. 

இந்த தேர்தலில் ஆளும் இடது சாரி கட்சிகள் ஓரணியாகவும், மம்தா பேனர்ஜி தலைமையிலான   திரிணமுல் காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியில் உள்ளன.

மேற்கு வங்காளம் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலம் என்பதால் இங்கு  பாதுகாப்பு காரணம் கருதி 6 கட்டங்களாக  தேர்தல்  நடத்தப்படுகிறது. ஏற்கனவே 5 கட்ட தேர்தலும் எவ்வித அசம்பாவித சம்பவமும் இன்றி முடிந்தது. இந்த 5 கட்ட தேர்தல்களிலும் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 5 கட்ட தேர்தல்  முடிந்த நிலையில் நேற்று ஆறாவது மற்றும் இறுதி கட்ட தேர்தல் நடத்தப்பட்டது.

மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த மேற்கு மிதுனாபூர், பாங்குரா, புரூலியா ஆகிய  மாவட்டங்களை உள்ளடக்கிய 14 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடந்தது.

காலை முதலே மக்கள்  வாக்குச்சாவடிகளுக்கு ஆர்வத்துடன் சென்று  ஓட்டளித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இந்த 14 தொகுதிகளிலும் மொத்தம் 97 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இந்த 14 தொகுதிகளிலும் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்டத்து 57 ஆயிரத்து436 ஆகும்.

ஆண்களும் பெண்களும் ஆர்வத்துடன் வந்து ஓட்டு போட்டனர்.

சட்ட அமைச்சர் ரபிலால் மொய்த்ரா உள்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த இறுதிக்கட்ட தேர்தலில் களத்தில் உள்ளனர். நேற்று காலை 7 மணி முதல் மாலை 3 மணிவரை மட்டுமே வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவோயிஸ்ட்டுகளின் அச்சுறுத்தல் இருப்பதால் ஓட்டுப்பதிவு நேரம் மாற்றியமைக்கப்பட்டது. 

கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த 14 தொகுதிகளிலும் 84.2 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளன. இந்த 6 கட்ட ஓட்டுப்பதிவுகளின் வாக்கு எண்ணிக்கை வருகிற 13 ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலைக்குள் அனைத்து தொகுதிகளின் முடிவுகளும் அறிவிக்கப்படும். 13 ம் தேதி வெற்றி பெறப்போவது இடதுசாரிகளா அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியா என்பது தெரிந்துவிடும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: