வேலூரில் நாளை அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்

சென்னை, பிப்.24 - வேலூர் பேருந்து நிலையத்திற்கான 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் தி.மு,க.வினருக்கு உறுதுணையாக இருந்து வருவதோடு பாதாள சாக்கடை திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கும் மைனாரிட்டி கருணாநிதி அரசை கண்டித்து நாளை (25.2.2011) அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த ஐந்து ஆண்டு கால மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் பொதுச் சொத்துக்களைக் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே தி.மு.க.​வினரால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கென அரசால் கையகப்படுத்தப்பட உள்ள 9.75 ஏக்கர் நிலம் தி.மு.க.​வினரின் கைக்குப் போகும் நிலை உருவாகி உள்ளது. எனது ஆட்சிக் காலத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 8.7 ஏக்கர் பரப்பளவில் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதோடு, பெருகி வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தனியாரால் சென்னை உயர் nullநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் துரதிருஷ்டவசமாக தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை மைனாரிட்டி தி.மு.க. அரசு ஏற்றது.  இதனையடுத்து, நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்த சென்னை உயர் nullநீதிமன்றம், விதிகளுக்கு உட்பட்டு பொது நோக்கத்திற்காக நிலத்தினை கையகப்படுத்த அனுமதி அளித்து 2008​ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து,  தனியாருக்கு சொந்தமான 9.75 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த ஆட்சியருக்கு கருத்துரு அனுப்புவது தொடர்பான தீர்மானம் வேலூர் மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்டது. இதற்குப் பிறகு, இந்த நிலத்தை கையகப்படுத்த எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  தற்போது மேற்படி 9.75 ஏக்கர் நிலத்தை அடிமாட்டு விலைக்கு நில உரிமையாளரிடமிருந்து உள்ளூர் தி.மு.க. நபர் வாங்கிவிட்டதாகவும், மேற்படி நிலத்தை சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை ரத்து செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.  இது குறித்து, மாநகராட்சி ஆணையரிடம் கேட்கப்பட்டதற்கு, மாநகர் மன்றக் கூட்டத்தில் போடப்பட்ட ஒரு தீர்மானத்தை 6 மாதம் கழித்து ரத்து செய்ய முடியும் என்றும், புதிய இடத்தை கையகப்படுத்துவதற்கான நிதி மாநகராட்சியிடம் இல்லை என்றும், இந்தச் சூழ்நிலையில் அங்கு நடைபெறும் பணிகளில் தலையிட இயலாது என்றும், தற்போதுள்ள பேருந்து நிலையம் 25 ஆண்டுகளுக்குப் போதுமானது என்றும் பேட்டி அளித்திருக்கிறார். இது பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்துள்ளது.  மாநகராட்சி ஆணையரின் இந்தப் பேட்டி மக்களின் புகாரினை உறுதி செய்யும் விதமாக அமைந்துள்ளது. மக்களைப் பாதிக்கும் மற்றொரு முக்கியமான பிரச்சினை ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள்.  பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், 30 விழுக்காடு பணிகள் கூட முடிவடையவில்லை என்றும், வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளிலும் சாக்கடை நீnullர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு இருப்பதாகவும், சாலைகள் குண்டும், குழியுமாகக் காட்சி அளிப்பதாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கான நிலம் அபகரிக்கப்படுவது குறித்தோ, பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிப்பது குறித்தோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மைனாரிட்டி தி.மு.க. அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, வேலூர் பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 9.75 ஏக்கர் நிலத்தை அபகரிக்க திட்டமிட்டிருந்தும் தி.மு.க.​வினருக்கு உறுதுணையாக செயல்படுகின்ற, பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை ஆமை வேகத்தில் மேற்கொண்டு இருக்கின்ற மைனாரிட்டி தி.மு.க. அரசைக் கண்டித்தும், தி.மு.க.​வினரின் நில அபகரிப்பை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில், 25.2.2011 வெள்ளிக் கிழமை அன்று காலை 10 மணி அளவில், வேலூர் சத்துவாச்சாரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் ஆதிராஜாராம் தலைமையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்  கே. சிவசங்கரன், வேலூர் நகர அ.தி.மு.க. செயலாளர் வி. ரேணுகோபால் மற்றும் சத்துவாச்சாரி நகர அ.தி.மு.க. செயலாளர் ஏ.பி.எல். சுந்தரம் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக்  கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெ ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை உட்பட அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளும், அ.தி.மு.க. உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும்.
தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்களும் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் நலனை முன் வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆதரவு நல்கிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: