உள்நாட்டுக் குழப்பம் எதிரொலி: உக்ரைன் பிரதமர் ராஜினாமா

Image Unavailable

 

உத்ரைன், ஜன, 30 - உக்ரைனில் உள்நாட்டுக் குழப்பம் நீடிக்கும் நிலையில் அந்த நாட்டு பிரதமர் மிகோலா அசாரோவ் தனது பதவியை செவ்வாய்க்கிழமை ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, நாட்டு நலனைக் கருத்திற் கொண்டு பதவியை விட்டு விலகுவதாகத் தெரிவித்தார்.

ஐரோப்பிய யூனியனுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுக்கும் அதிபர் விக்டர் யானுகோவிச் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி முக்கிய எதிர்க்கட்சிகள் கடந்த சில மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றன. தற்போது நீதித்துறை அமைச்சக அலுவலகம், அதிரடிப் படை போலீஸார் தங்கியிருந்த கட்டிடங்களை போராட்டக்காரர்கள் ஆக்கிமித்துள்ளனர். இதில் நீதித்துறை அமைச்சக அலுவலகத்தை விட்டு போராட்டக்காரர்கள் வெளியேறாவிட்டால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நீதித் துறை அமைச்சர் ஒலினா லுகாஸ் எச்சரித்துள்ளார்.

மேலும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சில கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டு வரவும் அதிபர் விக்டர் யானுகோவிச் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவில் விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அந்த நாட்டு பிரதமர் மிகோலா அசாரோவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தத் தகவலை நிருபர்களிடம் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

உக்ரைனில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் காக்கப்பட வேண்டும். தனிநபரின் ஆசை, திட்டங்களுக்கு மக்கள் இடம் அளிக்கக்கூடாது. நாட்டு நலன் கருதி நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று தெரிவித்தார். பிரதமரின் ராஜினாமாவை தொடர்ந்து அவரது அமைச்சரவையும் கலைக்கப் படும் என்று தெரிகிறது.

புதிய பிரதமர் தலைமையில் புதிய அரசு பதவியேற்பதற்கு 60 நாள்கள் வரை ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை நாங்கள் போராட்டத்தைக் கைவிட மாட்டோம். இப்போது ஆக்கிரமித்திருக்கும் அரசு அலுவலகங் களைவிட்டு வெளியேற மாட்டோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதனால் உக்ரைனில் தொடர்ந்து பதற்ற மான சூழ்நிலை நிலவுகிறது. எந்த நேரமும் அவசர நிலை பிரகடனம் செய்யப்படலாம் என்று நிலையில் அதனைத் தடுக்க ஐரோப்பிய யூனியனின் சிறப்பு தூதர் உக்ரைனுக்கு விரைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ