முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆன் லைன் மூலம் பதிவு வேலைவாய்ப்புத் துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, மே.- 25 -  பிளஸ் 2 மாணவர்கள்  தங்களது  சான்றிதழை பெற்றுக்கொண்டவுடன், படித்த பள்ளியிலேயே ஆன் லைன் மூலம்  15 நாட்களில்  வேலைவாய்ப்பு பதிவினை செய்துகொள்ளலாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதற்கு வேண்டிய ஏற்பாட்டினை செய்துகொடுக்கும்படி வேலைவாய்ப்புத்துறைக்கு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மேல்நிலைக்கல்வி 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பணி மூப்பு தகுதி உடனடியாக கிடைக்க வேண்டும் என்பதால், மதிப்பெண் பட்டியல் பெற்ற உடனேயே வேலைவாய்ப்பு அலுவலகங்களை 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்  நாடுகின்றனர். அவ்வாறு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் உடனடியாக வேலைவாய்ப்பு அலுவலகங்களை அணுவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. மேலும், கால விரையம், போக்குவரத்து செலவு ஆகியவை ஏற்பட்டு, மாணவி, மாணவியர் பெரும் இன்னலுக்கு உள்ளாகின்றனர். இவ்வாறு மாணவ மாணவியர்களுக்கு ஏற்படும் பிரச்சனை எனது கவனத்திற்கு கொண்டு  வரப்பட்டவுடன், அதனை தீர்க்கும் வகையில் மதிப்பெண் பட்டியலை பள்ளியில் பெறும் நாளிலேயே, மாணவ மாணவியர் பயிலுகின்ற பள்ளியிலேயே வேலைவாய்ப்பு வேண்டி ஆன்லைன் மூலம் பதிவு செய்ய ஆணையிட்டுள்ளேன்.
இந்த 2011 ஆம் ஆண்டு 12-ம் வகுப்பு தேச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்கள் பள்ளியிலிருந்தே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய நான் அறிவுறுத்தியுள்ளேன்.
மேல்நிலைக் கல்வி மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் நாளான 25.5.11-லிருந்து 15 நாட்களுக்குள் அந்தந்த பள்ளியிலேயே மாணவ, மாணவியர் வேலை வாய்ப்புக்காக பதிவுசெய்து, வேலைவாய்ப்பு பதிவு அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு 15 நாட்களில் பதிவு செய்யப்படும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் 25.5.11 தேதியிட்ட பதிவு மூப்பு வழங்கப்படும்.
இப்பணியை பள்ளிக்கல்வித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, தகவல் தொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் எல்காட் நிறுவனம் ஆகியன இணைந்து செய்யும்.
இவ்வாறு பதிவு செய்யும் மாணவ, மாணவியர்கள் தங்களது  மதிப்பெண்  சான்றிதழ் பெற தாங்கள் பயின்ற பள்ளிக்கு செல்லும் போது அவருடைய பெயர் இடம் பெற்றுள்ள குடும்ப அட்டை, மற்றும் குடும்ப அட்டையின் நகலினை தவறாது எடுத்து செல்ல வேண்டும். மேலும், பத்தாவது கல்வி தகுதியினை வேலைவாய்ப்பக அலுவலகத்தில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள் அதற்கான வேலைவாய்ப்பு அடையாள அட்டையினையும் உடன் எடுத்து செல்ல வேண்டும். பதிவுதாரர்கள் மாற்று திறனாளிகளாக இருப்பின் தங்களுடைய கல்வி தகுதியை பள்ளியில் பதிவு செய்த பின்னர் தங்கள் முன்னுரிமையை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு வேண்டி தாங்கள் பயின்ற பள்ளியின் மூலம் இணையதள செய்தியுடன் பதிவு செய்யும் மாணவ, மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பக அலுவலக  பதிவு எண், பதிவு செய்யும் நாளன்றே அவர்களுக்கு வழங்கப்படும். இப்பணி 25.5.11 முதல் 15 நாட்கள்களுக்கு நடைபெற உள்ளதால் மாணவ, மாணவியர்கள் இந்த அரிய வாயப்பினை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு  அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு படித்த பள்ளியிலிருந்தே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்யப்படும் வசதி இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்