தமிழ்புத்தாண்டை மாற்றி உத்தரவிட கோரிக்கை

செவ்வாய்க்கிழமை, 31 மே 2011      தமிழகம்
Image Unavailable

அறந்தாங்கி, மே 31 - தமிழ்புத்தாண்டை மீண்டும் சித்திரை மாதத்திற்கே மாற்றித்தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஜோதிடர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில் ஜோதிடர்கள் தெரிவித்துள்ளதாவது:​-​ஆண்டாண்டு காலமாக சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் தொடர்ந்து மக்களுடன் பின்னிப்பிணைந்து வாழ்க்கையை நல்வழிப்படுத்திக்கொண்டு வருகிறது. அக்காலத்து ரிஷிகள், சித்தர்கள் கிரகங்களின் தாக்கத்திற்கு ஏற்ப சடங்கு சம்பிரதாயங்களை அமைத்து வைத்தனர். அதன்படி கடைப்பிடிக்கவும் செய்தார்கள். தொன்றுதொட்டு இந்துக்களின் விழாக்கள் கூட அவ்வாறுதான் கண்டுபிடிக்கப்பட்டு இன்றுவரை கொண்டாடிவருகிறார்கள். உதாரணமாக ஆடியில் திருமணம் செய்தால் 10 வது மாதமான சித்திரையில்தான் குழந்தை பிறக்கும். சித்திரை மாதம் அக்னி நட்சத்திரம் வருகிறது. எனவே சிறு குழந்தைகளால் அந்த வெயிலின் கொடுமையை தாங்க முடியாது. எனவேதான் மணமக்களை ஆடியில் பிரித்துவைக்கிறார்கள். சித்திரைக்கு மேலும் பல சிறப்புகள் உள்ளன. உலகிற்கு ஒளிதரும் கிரகமான சூரியன் சித்திரை மாதத்தில்தான் மேஷ ராசியில் உச்சம் அடைகிறார். சித்திரை மாதத்தில்தான் சித்தர்கள் உருவாக்கிய சித்ரா பவுர்ணமியும் வருகிறது. ராசிகளில் முதல்ராசி மேஷ ராசி. காலபுருஷ தத்துவமும் அங்கேதான் அடங்கியுள்ளது. எனவே கடைசி முதல் ஆவதில்லை. முதலில் தொடங்கித்தான் கடைசியில் எதுவும் நிகழ்கிறது. கடந்தகால அரசு சித்திரையை மாற்றி தை மாதத்தை வருடப் பிறப்பாக அமைத்தது. எனவே மக்ள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. 

எனவே தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீண்டும் சித்திரை மாதத்தையை தமிழ் வருடப் பிறப்பாக மாற்றி அமைக்குமாறு அறந்தாங்கியைச் சேர்ந்த ஜோதிடர் பால.சீனிவாசன் மற்றும் ஜோதிடர்கள் சிவஞானம், வீரையாத்தேவர், கண்ணபிரான், மணமேல்குடி அர்ச்சுணன் மற்றும் பலர் கேட்டுகொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: