இலங்கை தூதரகத்தை அகற்றகோரி போராட்டம் - வைகோ கைது

திங்கட்கிழமை, 28 பெப்ரவரி 2011      தமிழகம்
raj6 0

 

சென்னை, பிப்.28 - பிரபாகரனின் தாயார் சிதையை ராஜபக்ஷே அவமான படுத்தியதை கண்டித்தும், இலங்கை தூதரகத்தை அகற்ற கோரியும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற வைகோ, தா.பாண்டியன், நெடுமாறன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இதுபற்றிய விபரம் வருமாறு:-

சில தினங்களுக்கு முன்பு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் இலங்கையில் மரணமடைந்தார். அவரது சிதையை இலங்கை அதிபர் ராஜபக்ஷே அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் உணர்வாளர்களை கொதிப்படைய செய்தது. இதை கண்டித்தும், இலங்கை தூதரகத்தை அகற்ற கோரியும் நேற்று காலை போராட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநில பொதுச் செயலாளர் தா.பாண்டியன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கான தமிழ் உணர்வாளர்களும் கலந்து கொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தேசியக்கொடி எரிக்கப்பட்டது. ராஜபக்ஷேவின் கொடும்பாவியும்  கொளுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வைகோ பேசியதாவது:-

பார்வதியம்மாளின் சிதைக்கு அவமரியாதை செய்த ராஜபக்ஷே ஒரு கொடுங்கோலன், யுத்த குற்றவாளி. இந்த போராட்டம் முடிவடைந்து விட்டதாக நினைக்க வேண்டாம். தியாகி முத்துக்குமார் ஏற்றி வைத்த தீ அணையாமல் இருக்கிறது. வேறு வகையில் அது போராட்டமாக முன்னேறி வரும். வெகு விரைவில் ராஜபக்ஷே யுத்த குற்றவாளியாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். டுனிசியாவில், எகிப்தில், லிபியாவில் வந்தது போல் ஒரு மாற்றம் வந்தே தீரும். அப்போது இந்த ராஜபக்ஷே மக்கள் முன் குற்றவாளியாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இங்குள்ள இலங்கை தூதரகம் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு வைகோ பேசினார். 

பின்னர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர்  ஊர்வலமாக கிளம்பினர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் பின்பு கைது செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: