கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை.யில் அமைச்சர் சிவபதி ஆய்வு

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜுலை- 11 - தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக தலைமையகத்திற்கு வருகைபுரிந்தார். மாதவரத்தில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிப் பிரிவுகள், கால்நடை அறிவியல் பூங்கா ஆகியவற்றின்  செயல்பாடுகள் பற்றி பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் சி.பாலச்சந்திரன் அமைச்சருக்கு விளக்கினார். மேலும் அமைச்சருக்கு பல்கலைக்கழக ஆராய்ச்சிப் பண்ணையில் அமைந்துள்ள பல்வேறு இந்திய நாட்டின் மாடுகளான கிர், சாகிவால், ரத்தி, தார்பார்கர், டியோனி, காங்கேயம் ஆகிய இனங்களின் குணநலன்கள் பற்றியும் தமிழ்நாட்டிலுள்ள செம்மறி ஆட்டினங்கள், அவற்றின் குண நலன்கள் பற்றியும் பல்கலைக்கழக அதிகாரிகள் விளக்கினர்.
மேலும் இப்பண்ணையில் அமைந்துள்ள மாதிரி ஈமு பண்ணையையும், நெருப்புக்கோழி பண்ணையையும் அமைச்சர் பார்வையிட்டார். இப்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள புல் பண்ணையில் வளர்க்கப்பட்டு வரும் கோ 4 ரக புல் பற்றியும், பசுந்தீவன பயிர் உற்பத்தி பற்றியும் அமைச்சர் கேட்டறிந்தார்
இந்த ஆய்வின்போது மாதவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.மூர்த்தி அமைச்சருடன் வருகைதந்து பல்கலக்கழக மீன் வள ஆராய்ச்சித் திட்டங்களைப் பற்றி கேட்டறிந்தார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்: